×

எதிர்க்கட்சிகள் முறையாக ஒருங்கிணைந்தால் பாஜவை தோற்கடிக்க முடியும்: அமெரிக்காவில் ராகுல் காந்தி உறுதி

சாண்டா கிளாரா (அமெரிக்கா): எதிர்க்கட்சிகள் முறையாக ஒருங்கிணைந்தால் பா.ஜவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சாண்டா குரூஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சிலிக்கான் வேலி வளாகத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு அரசியல்வாதியாக, பாஜவில் உள்ள பாதிப்புகளை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சிகள் சரியாக இணைந்தால் பாஜவை தோற்கடிக்க முடியும். கர்நாடகா தேர்தலைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி பாஜவை எதிர்த்துப் போராடி வீழ்த்தியது என்பதுதான் பொதுவான உணர்வு. ஆனால் நாங்கள் பயன்படுத்திய திட்டங்கள் பற்றி சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. கர்நாடகா தேர்தலில் நாங்கள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பயன்படுத்தினோம். இதற்கான யோசனைகள் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்து கிடைத்தன. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட பாஜ 10 மடங்கு அதிக பணத்தை செலவிட்டது. இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை.

2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு வேண்டும். அதை விட முக்கியமாக ஆளும் பாஜவை தோற்கடிக்க ஒரு மாற்று பார்வை தேவை . எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை விஷயத்தில், நாங்கள் அதை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். அந்த பணி தற்போது வரை மிகவும் நன்றாக நடந்து வருகிறது. ஆனால் எனது கருத்துப்படி பாஜவை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மட்டுமே போதுமானதாக இருக்காது. பா.ஜவுக்கு மாற்றாக ஒரு பார்வை வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் முதல்படி. நாங்கள் அதை நோக்கி முன்னேறி வருகிறோம்.

பாஜ மக்களை அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கிய போது மக்களுடன் தொடர்பு கொள்ள தேவையான அனைத்து கருவிகளும் பாஜ-ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் அரசியல் ரீதியாக செயல்படுவது ஏதோ ஒரு வகையில் கடினமாகிவிட்டது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். எனவே, ஊடகங்களில் நீங்கள் பார்ப்பது எல்லாம் உண்மை என்று நினைக்க வேண்டாம். இந்தியாவில் இன்று ஏழைகளும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஆதரவற்றவர்களாக உணர்கிறார்கள்.

கோபம், வெறுப்பு, ஆணவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் பாஜக கூட்டத்தில் அமர்ந்திருப்பீர்கள். இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்த ஒன்றிய அரசு எவ்வளவோ முயன்றது. இந்த பயணத்தை தொடங்கிய ஐந்தாறு நாட்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான கிமீ நடப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை உணர்ந்தோம். ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் 3 வாரங்கள் கடந்த பின்னரும் தினமும் 25 கிமீ நடந்தும் நான் சோர்வடையவில்லை. என்னுடன் நடந்தவர்களிடம் கேட்ட போதும் அவர்களும் அதே போல் உணர்ந்தனர்.

அதன்பிறகுதான் புரிய ஆரம்பித்தது. நடப்பது நாங்கள் மட்டுமல்ல, எங்களுடன் நடப்பது ஒட்டுமொத்த இந்தியாவும் என்று. இவ்வாறு அவர் பேசினார். காலிஸ்தான் ஆதரவு கோஷம்: ராகுல்காந்தி பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். 1984ம் ஆண்டு சீக்கிய கலவரம் தொடர்பாகவும், ராகுல்காந்தியின் பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனால் நிகழ்ச்சி தடைபட்ட நிலையில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ‘வருக வருக… காங்கிரசை பொறுத்தவரை நாங்கள் அனைவர் மீதும் அன்பு வைத்துள்ளோம். யாரேனும் எதாவது கூற நினைத்தால் அதை அவர்கள் எந்த தடையும் இன்றி கூறலாம். அதை கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் கோபப்படப்போவதில்லை, ஆக்ரோஷப்படப்போவதில்லை. நாங்கள் அவர்களின் பேச்சை கேட்போம். அன்பு செலுத்துவோம். ஏனென்றால் இது தான் எங்கள் வழக்கம்’ என்றார். அப்போது காவலர்கள் கோஷம் எழுப்பியவர்களை வெளியேற்றினர்.

* ஏர்போர்ட்டில் 2 மணி நேரம் காத்திருந்த ராகுல்
மோடி மீதான விமர்சனம் தொடர்பான வழக்கில் எம்பி பதவியை இழந்ததால் ராகுல்காந்திக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவரை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா வரவேற்றார். ராகுல்காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை வைத்திருந்ததால், சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தார். மேலும் அமெரிக்காவில் குடியுரிமை அதிகாரிகளின் விசாரணைக்காக, அவர் ​​விமான நிலையத்தில் வரிசையில் நின்றார். அவருடன் அங்கிருந்தவர்களில் சிலர் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது, ‘​​நீங்கள் ஏன் வரிசையில் நிற்கிறீர்கள்? என மக்கள் அவரிடம் கேட்டதற்கு, அதற்கு அவர் ‘நான் சாதாரண மனிதன். நான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை’ என்று கூறினார்.

* கடவுளுக்கே பாடம் எடுப்பார் மோடி
ராகுல்காந்தி பேசும்போது, ‘இந்தியாவில் ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் கடவுளை விட அதிகமாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் உட்கார்ந்து என்ன நடக்கிறது என்பதை அவருக்கு விளக்கலாம். நிச்சயமாக, நமது பிரதமர் அத்தகைய ஒரு உதாரணம்தான். நீங்கள் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார். அவர் பேசுவதை கேட்டு நான் உருவாக்கிய உலகமா இது என்று கடவுள் குழப்பமடைவார்’ என்றார்.

* தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
ராகுல்காந்தி பேசும் போது,’இந்தியா என்பது நமது அரசியல்சாசனத்தின்படி மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா. நமது அரசியல்சாசனத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழி, வரலாறு, கலாச்சாரம் ஆகியவை ஒன்றிய அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் அனைவரும் நமது அரசியல்சாசனத்தின் அடிப்படையில் ஒத்துழைத்து நடக்க வேண்டும். இதுதான் நடைமுறை. இதுவரை அப்படித்தான் நடந்தது. பா.ஜவும், ஆர்எஸ்எஸ்சும் இந்த கொள்கை மற்றும் அரசியல்சாசனத்தின் மீது தான் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதுதான் உண்மை. என்னைப்பொறுத்தவரையில், நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு மற்ற மொழிகளை எல்லாம் விட தமிழ் மிகவும் உயர்வானது. இது வெறும் மொழி மட்டுமல்ல. அதற்கென தனி வரலாறு உள்ளது.

அவர்களுக்கென தனி கலாச்சாரம் உள்ளது. அவர்களுக்கென தனி வாழ்வியல் முறை உள்ளது. எனவே தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். என்னைப்பொறுத்தவரை தமிழ்மொழிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது, இந்தியா மீதான கொள்கையின் மீதான அச்சுறுத்தல் ஆகும். அதே போல் வங்காளம், கன்னடம் , இந்தி , பஞ்சாபி மொழிகளை அச்சுறுத்துவது என்பது இந்தியா மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். மற்ற நாடுகளை விட நமது நாட்டின் பலம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். நாம் அனைவரும் வேறுவேறாக இருந்தாலும் ஒன்றாக இணைந்து இருக்கிறோம். இதில் இருந்துதான் நமக்கு பலமே வருகிறது. இந்த கொள்கையை தான் நானும், காங்கிரஸ் கட்சியும் கடைபிடித்து வருகிறோம்’ என்றார்.

The post எதிர்க்கட்சிகள் முறையாக ஒருங்கிணைந்தால் பாஜவை தோற்கடிக்க முடியும்: அமெரிக்காவில் ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,US ,Santa Clara ,USA ,Congress ,America ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...