திருவள்ளூர்: அரசு வழங்கிய இலவச வீட்டுமனை ஆக்கிரமிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் தாய், மகன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்தவர்கள் கௌரி மற்றும் அவரது மாமியார் யசோதா. இவர்களுக்கு, கடந்த 2011 ஆண்டு அரசு தலா 2.5 சென்ட் வீட்டுமனை வழங்கியது. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு அந்த இடத்திற்கு செல்லும் வழிப்பாதையின் இரு புறமும் முள்வேலி அமைத்து அந்த இடத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.டி.பாஸ்கர் ஆக்கிரமித்துள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 22ம் தேதி எஸ்.பி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த யசோதா(60) மற்றும் அவரது மகன் கோபி(40) ஆகிய இருவரும் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, அங்கு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.
பின்னர், இருவரின் உடலிலும் தண்ணீரை ஊற்றி மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை முடிந்த பிறகு, மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாவட்ட கலெக்டரிடம் புகாரை கொடுத்தனர். அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, யசோதா மற்றும் அவரது மகன் கோபி ஆகியோர் அங்கிருந்து சென்றனர்.
The post அரசு வழங்கிய இலவச வீட்டுமனை ஆக்கிரமிப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தாய், மகன் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி appeared first on Dinakaran.
