×

40 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் போலீஸ்காரர் உட்பட 5 பேர் பலி; மணிப்பூர் விரைகிறார் அமித் ஷா

இம்பால்: மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் பலியாகினர். மூன்று நாள் பயணமாக அமித் ஷா மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறையும், பதற்றமும் நீடித்தது. இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள், போராட்டக்காரர்கள் இறந்தனர். இதுகுறித்து நேற்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கூறுகையில், ‘போராட்டத்தின் போது வீடுகளுக்கு தீ வைத்தல், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதமேந்திய போராளிகள் (தீவிரவாதிகள்) 40 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது’ என்றார்.

மணிப்பூரில் நிலைமை மோசமடைந்துள்ளதால், மூன்று நாள் பயணமாக இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு செல்கிறார். இந்நிலையில் நேற்று மணிப்பூரின் சில பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களால், ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் பலியாகினர். காயமடைந்த 12 போலீசார் ராஜ் மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குக்கி பிரிவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள், செரோ மற்றும் சுகுனு பகுதிகளில் நேற்று பல வீடுகளுக்கு தீ வைத்தது. அதனால் புதியதாக அங்கு வன்முறை வெடித்தது. அதேபோல் இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் நேற்று மோதல்கள் நடந்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது’ என்றனர்.

The post 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் போலீஸ்காரர் உட்பட 5 பேர் பலி; மணிப்பூர் விரைகிறார் அமித் ஷா appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Manipur ,Imphal ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!