×

அழகுற காட்சியளிக்கும் அழகர்கோவில் சிறுவர் பூங்கா சுவாமியை தரிசிக்கலாம்…ஜாலியாக விளையாடலாம்…

* புதிய வசதிகளுடன் புனரமைப்பு

* கண்களை கவரும் நீரூற்று

* பக்தர்கள் பெரும் வரவேற்பு

அழகர்கோவில் : அழகர்கோவில் சிறுவர் பூங்கா பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்து வருகிறது.மதுரை மாவட்டத்தின் திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுவது அழகர்கோவில். தென் மாவட்ட மக்கள் தங்களது குலதெய்வ கோயில் மற்றும் ஊர் திருவிழா தொடங்கும் முன்பு அழகர்கோவில் மலைமேல் உள்ள தீர்த்தத் தொட்டியில் வந்து தீர்த்தத்தை எடுத்து சென்று திருவிழாக்களை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய பெருமைமிக்க அழகர் கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இங்கு ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதல்படி, பக்தர்களின் வசதிக்காக கோயில் துணை ஆணையர் ராமசாமி தலைமையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மேலும் ஒரு சிறப்பாக பழமுதிர்சோலைக்கு செல்லும் நுழைவு வாயில் இடதுபுறம் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியாழ்வார் சிறுவர் பூங்கா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

புதிதாக பெயர் பலகை வைக்கப்பட்டு, பூங்காவை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்குள் நிழற்குடைகள் அமைத்து கண்ணை கவரும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. புதிதாக புற்கள் அமைத்தும், குழந்தைகள் விளையாட கூடிய ஊஞ்சல், சறுக்கல் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று மலைநேரத்தில் பக்தர்களை வெகுவாக கவர்கிறது.

தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பூங்காவிற்கு வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் சுமார் 1000 முதல் 1500 பேர் வரை வந்து மகிழ்கின்றனர். இங்கு வெயில் காலத்தில் புற்கள் காயாமல் இருக்க ஸ்பிரே இயந்திரம் மூலம் சுழற்சி முறையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊழியர்கள் மூலம் அவ்வப்போது குப்பைகள் சேரா வண்ணம் சுத்தமாக பராமரிக்கின்றனர்.

இது குறித்து நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் சுதாகர் கூறுகையில், ‘‘நாங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் நாங்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரும் போது பூங்காவை தயார் செய்து கொண்டிருந்தனர். அதற்கு பின்னர் தற்போது தங்கை மகளுக்கு மொட்டை போடுவதற்காக வந்தோம். சாமி தரிசனம் செய்து விட்டு பூங்காவிற்கு வந்தோம். மிக அற்புதமாக பூங்காவை தயார் செய்துள்ளனர்.

சுத்தமான, அழகான, இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மாற்றியுள்ளனர். பக்தர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சுத்தமான சுகாதாரமான இடத்தினை உருவாக்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என புற்களும், செடிகளும், மரங்களும், மலைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள பூங்கா உதவியாக உள்ளது.

ஏற்கனவே பக்தர்கள் வசதிக்காக விசாலமான கார் பார்க்கிங், முதலுதவி சிகிச்சை மையம், ஆங்காங்கே அறிவிப்பு பலகை, வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களின் பாதங்களை காக்க தேங்காய் நார் விரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனநிலையை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய அறநிலையத்துறைக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.

The post அழகுற காட்சியளிக்கும் அழகர்கோவில் சிறுவர் பூங்கா சுவாமியை தரிசிக்கலாம்…ஜாலியாக விளையாடலாம்… appeared first on Dinakaran.

Tags : Alagharkoil Children's Park Swamy… ,Alagharkoil ,Alagharkoil… ,Alagharkoil Children’s Park ,Swamy…Have ,Dinakaran ,
× RELATED சித்திரை திருவிழாவில் அழகர்...