×

குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழ கண்காட்சி நிறைவு-20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

ஊட்டி : குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் 2 நாட்கள் நடைபெற்ற 63வது பழ கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரவும், உற்சாகப்படுத்தவும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டிற்கான காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, படகு போட்டிகள் உள்ளிட்டவை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழ கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.

இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 1.2 டன் அன்னாசிப்பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அன்னாசி பழம் வடிவமைப்பு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
இதுதவிர பல்வேறு வகையான பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட பழக்கூடை, ஆரஞ்சு பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பழ பிரமிடு, மாதுளை பழங்களால் ஆன மண்புழு, திராட்சையை கொண்டு உருவாக்கப்பட்ட மலபார் அணில் போன்ற வடிவங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து வெகுவாக ரசித்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் திட்டமான ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை போன்ற வடிவங்களும், நீலகிரி மாவட்டத்தின் 200வது ஆண்டினைக் கொண்டாடும் வகையில் ஊட்டி – 200 போன்ற வடிவம், பழங்களை கொண்டும் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுதவிர பழவியல் நிலையம், தேயிலை வாரியம், டேன்டீ, இன்ட்கோ சர்வ் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் பழ கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிறந்த பழத்தோட்டம் அமைத்திருந்தவர்கள், அரங்குகள் அமைத்திருந்தவர்களுக்கு கோப்பைகள், கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரு நாட்கள் நடைபெற்ற பழ கண்காட்சியை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

முடிவில், நேற்று நடந்த நிறைவு விழாவில் சிறந்த பழத்தோட்டம் அமைத்தவர்களுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் சுழற்கோப்பைகளை வழங்கினார். தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்புசாமி, குன்னூர் ஆர்டிஓ., பூஷண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழ கண்காட்சி நிறைவு-20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.

Tags : 63rd Fruit Fair ,Sims Park ,Coonoor ,
× RELATED ஊட்டி அருகே தேயிலை பூங்காவை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்