×

கம்பம் நகருக்குள் உலா வரும் அரிசிக்கொம்பன் யானை

* டூவீலரில் வந்தவரை தாக்கியதால் பரபரப்பு
* 144 தடை உத்தரவு அமல்; கண்காணிப்பு தீவிரம்

கூடலூர்: கேரளாவின் மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிசிக்கொம்பன் யானை, கம்பம் நகருக்குள் புகுந்து களேபரத்தை ஏற்படுத்தியது. டூவீலரில் வந்தவரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரளாவின் மூணாறு அருகே அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் காட்டுயானையை கடந்த ஏப்.30ம் ேததி வனத்துறையினர் மயக்க ஊசி ெசலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால், அது கடந்த சில நாட்களுக்கு முன் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்கு வந்தது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அரிசிக்கொம்பன் யானை, குமுளி ரோஜாப்பூ கண்டம், குடியிருப்பு பகுதிக்கு 100 மீட்டர் அருகில் வந்தது, ஜிபிஎஸ் சிக்னல் மூலம் வனத்துறைக்கு தெரிந்தது.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். நேற்று காலை தேனி மாவட்டம், கம்பம் நகரில் உள்ள மின்வாரிய பகுதிக்கு வந்த அரிசிக்கொம்பன் யானை தெருக்கள், சாலைகளில் வலம் வந்து அங்கு சென்றவர்களை விரட்டியது. சில வீடுகளின் முன் கதவை தட்டியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். வழியில் நின்ற ஆட்டோவை தள்ளி சேதப்படுத்தியது. டூவீலரில் வந்தவரை தாக்கியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அங்குள்ள வாழைத்தோப்பில் அரிசிக்கொம்பன் பதுங்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வனத்துறையினர், யானையை விரட்டுவது குறித்து ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கம்பம் நகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டுள்ளன. கம்பம் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வெளி நபர்கள் கம்பம் நகருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில், ‘‘யானையை வெடி வைத்து விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கம்பம் – குமுளி புறவழிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது’’ என்றார்.

2 கும்கி யானைகள் வருகை
தேனி கலெக்டர் ஷஜீவனா அறிக்கையில், யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்க தேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுயம்பு, முத்து என 2 கும்கி யானைகளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக, அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த வேண்டும். எனவே யானை செல்லும் பாதையில் எவ்வித இடையூறும் செய்ய வேண்டாம். புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க யானை அருகில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விடும் வரை மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதன்பின் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து டாப்சிலிப்பிலிருந்து 2 கும்கி யானைகளும் லாரிகளில் கம்பம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டிரோனால் மிரண்டு வெளியேறியது
கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசிக்கொம்பன் யானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நின்றிருந்தது. அப்போது திருமண போட்டோகிராபர் ஒருவர், டிரோனை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றுள்ளார். டிரோன் கேமரா சத்தத்தால் மிரண்ட யானை அப்பகுதியை விட்டு வெளியேறியது. எனவே யானை வெளியேற காரணமான போட்டோகிராபர் ஹரிஷை, கம்பம் போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

The post கம்பம் நகருக்குள் உலா வரும் அரிசிக்கொம்பன் யானை appeared first on Dinakaran.

Tags : Toweeler ,Amal ,Cuddalore ,Kerla ,Pole ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...