×

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?.. அமைச்சர் பொன்முடி கேள்வி

விழுப்புரம்: உயர்கல்வி துறை செயலர், அமைச்சருக்கு தெரிவிக்காமல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் நேற்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: அண்ணாமலையின் கருத்துக்களுக்கு, நான் பதலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. நேரடியாக விவாதிக்க தயார் என்று சொல்லியிருக்கிறார். நானும் தயார் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். சென்னையில் எந்த இடத்தில், எந்த பொதுக்கூட்டத்தில் அவர் எந்த இடத்தில் பேசுவதற்கு தயார் என்கிறாரோ அந்த இடத்திற்கு நான் தயார்.  இந்தியாவின் புதிய கல்வி கொள்கையை பற்றி பேசுவதற்காக ஜூன் 5ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று துணைவேந்தர்களுக்கு எல்லாம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர்.

நான் இணைவேந்தர், எனக்கே அது தெரியாது. அது அண்ணாமலைக்கு தெரிந்திருக்கிறது. அவர், அரசுக்கு தெரியாமல் நடக்கிறதா என்று கேட்கிறார். ஆளுநர் இந்த கூட்டத்தை கூட்டியது செயலாளருக்கும் தெரியாது. அமைச்சருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் கல்விக்கொள்கை வகுப்பதற்காக ஒரு குழுவை நியமித்து அதனுடைய அறிக்கை வரவிருக்கும் நேரத்தில் துணைவேந்தர்களை எல்லாம் அழைத்து புதிய கல்வி கொள்கை குறித்து விளக்கம் கொடுப்பதற்கு ஒரு வேந்தருக்கு என்ன உரிமை இருக்கிறது. அதுவும் தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல், அவர்களுடைய கொள்கைக்கு எதிர்ப்பாக செய்ய முற்படுவது யார். இது எல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா. அண்ணாமலை தமிழ் வளர்ச்சி கல்வி மீது அக்கறை உள்ளவராக இருந்தால், ஆளுநரை சந்தித்து இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். பல மொழிகளை படிப்பதிலே எங்களுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது.

ஆனால் தேர்வு எழுதுகிறபோது கட்டாய மொழி என்பதை ஏற்க முடியாது. இரு மொழிதான் இருக்கவேண்டும் என்பது திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. புதிய கல்வி கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி படித்தால் ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழுக்கு எந்த சலுகைகளும், முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இவர்களுடைய நோக்கம் எல்லாம் இந்தியை புகுத்த வேண்டும். இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாநிலம் தமிழ்நாடு. ஏன், தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே நம்முடைய ஆட்சியில்தான். இந்தளவிற்கு செய்திருக்கிற எங்களை பார்த்து பிஜேபியில் இருக்கிற அண்ணாமலை பேசுவது, சனாதனத்திற்கு ஆதரவாக, தாய்மொழி தமிழுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அண்ணாமலை வரலாற்றையும் படிக்க வேண்டும். அரசியலையும் தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?.. அமைச்சர் பொன்முடி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Viluppuram ,Department of Higher Education ,Government of the Union ,Bonmudi ,Dinakaran ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!