×

தர்மபுரி அருகே மழைநீர் வழிந்தோட வழியின்றி பயிர் நாசம்-விவசாயிகள் சோகம்

தர்மபுரி : தர்மபுரி அருகே சோகத்தூரில் 4 வழிச்சாலையை ஒட்டியுள்ள 50 ஏக்கர் நிலத்தில், மழைநீர் தேங்கி பயிர் அழுகி வருவதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் வழியாக அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர் வரை, 4 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை அமைப்பதற்காக சோகத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையை ஒட்டிய விவசாயிகளிடமிருந்து, சுமார் 100 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஏரியை ஒட்டியபடி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. சோகத்தூர் ஏரிக்கும் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள 50 ஏக்கர் நிலத்தில், விவசாயிகள் நெல், சோளம், தட்டை, வாழை மற்றும் சம்பங்கி பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், 50 ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் மழைநீர் வழியின்றி தேங்கியது. இதனால், அனைத்து பயிர்களும் அழுகி விட்டன.
இதுகுறித்து சோகத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், நஞ்சப்பன், கிருஷ்ணன், சின்னசாமி, தீர்த்தகிரி, கணேசன், சுப்ரமணி, சம்பத் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது: சோகத்தூர் வழியாக 4 வழி நெடுஞ்சாலை செல்வதால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விரிவாக்கப் பணிக்காக எங்களிடமிருந்து சுமார் 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர்.

அதற்கான உரிய இழப்பீடு தராமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், எஞ்சிய 50 ஏக்கர் நிலம், சோகத்தூர் ஏரிக்கும் -தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் போதே அதிகாரிகளிடம் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என மனு அளித்தோம். கடந்த ஒரு வருடமாக வடிகால் அமைத்து தருவதாக கூறி வந்த அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, ஒரு சில நாட்கள் பெய்த கோடை மழைக்கே, நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி சேதமாகி விட்டன. இதனால், ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ₹10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அழுகிய பயிர்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும். விளை நிலங்களில் மழைநீர் தேங்காத வகையில் உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தர்மபுரி அருகே மழைநீர் வழிந்தோட வழியின்றி பயிர் நாசம்-விவசாயிகள் சோகம் appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Sogathur ,Nasam ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருட்டு