×

1,544 மையங்களில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை ₹68 கோடியில் நடைபெறும் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

*திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு

கலசபாக்கம் : 1,544 மையங்களில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ₹68 கோடியில் நடைபெறும் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். கலசபாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு செய்தபோது முதியோர்களுக்கு அடிப்படை வசதிகள், உணவு சுகாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்தார். மேல்வில்வராய நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதேபோல், விண்ணுவாம்பட்டு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். கோயில் மாதிமங்கலம், அருணகிரி மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தபோது உள்ளாட்சி பிரதிநிதிகள் நினைத்தால் கிராமத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தர முடியும். அரசு பல்வேறு திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர், சாலை வசதி பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, கலெக்டர் பா.முருகேஷ் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ₹68 கோடியில் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பள்ளி திறக்கும் முன் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 1,544 மையங்களில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பள்ளி திறக்கும் போது 844 மையங்களில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளன.

காலை சிற்றுண்டி செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் திருமால், பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, முருகன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள், முனுசாமி ஊராட்சி தலைவர்கள் வித்யா பிரசன்னா, தரணி பாண்டியன், முருகன் பத்மாவதி உள்பட பலர் உடனிருந்தனர்.

உணவை சுவைத்து பார்த்த கலெக்டர்

கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது, முதியோர்களுக்கு வழங்க வைத்திருந்த உணவுகளை சுவைத்து பார்த்தார். மேலும், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பிள்ளைகள் உதவிகள் செய்யவில்லையே என வருத்தப்பட வேண்டாம். என்னால் முடிந்த உதவிகளை உங்களில் ஒருவனாக இருந்து செய்ய தயாராக உள்ளேன். எந்த குறையாக இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

The post 1,544 மையங்களில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை ₹68 கோடியில் நடைபெறும் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...