×

சேக்கிழார் நாயனார் குருபூஜை

தேவதானப்பட்டி, மே 27: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த முனையடுவநாயனார் கோயிலில் சேக்கிழார் நாயனார் குருபூஜை நடைபெற்றது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேக்கிழார் நாயனாருக்கு வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் முனையடுவநாயனார் கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமிஅம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சாணமூர்த்தி, லிங்கோத்பர்,

துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, திருமஞ்சனதிரவியம், மஞ்சள்பொடி, மாபொடி, பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. சேக்கிழார் நாயனாரின் வாழ்க்கை வரலாறு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. சிவனடியார்களுக்கு மகேஸ்வரபூஜை அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாணிக்கம்பிள்ளை குடும்பத்தார் செய்திருந்தனர்.

The post சேக்கிழார் நாயனார் குருபூஜை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Munyadunayanar ,temple ,Silwarpatti ,Sekhaur ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு