×

போடி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல்

போடி, மே 27: தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக்கழகமான டாஸ்மாக் மூலம் 90 சில்லறை மதுபானக்கடைகள் உள்ளன. இதில் மதுபான விற்பனை கூடங்களை ஒட்டி மதுஅருந்தும் கூடமான பாரினை முறைப்படி நடத்துவதற்கு 13 பார்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி இல்லாத சுமார் 77 கடைகளை ஒட்டிய பகுதிகளில் சட்டப்புறம்பாக மதுபான கூடங்களும், கடைகளை ஒட்டி தள்ளுவண்டிகள், சிறிய ஓலைக்குடிசைக் கடைகளில் மதுபார் நடத்தப்பட்டு வந்தது. எனவே, அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்படும் மதுபானம் அருந்தும் கூடங்கள் குறித்து கணக்கெடுத்து அதனை சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, தேனி மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல், 4 சுவர்களுக்கு மத்தியில் உணவு பதார்த்தங்களுடன் கூடிய பாராக நடத்தப்பட்ட 55 பார்களை கடந்த இரு நாட்களுக்கு முன்டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள் இணைந்து சீல் வைத்தனர். மேலும், சில்லறை மது விற்பனை கூடங்கள் அருகே தள்ளுவண்டிகளிலும், சிறிய அளவிலான பெட்டிக்கடைகளிலும் நடத்தப்பட்டு வந்த பார்களையும் அதிகாரிகள் எச்சரித்து இப்பகுதிகளில் இருந்த அப்புறப்படுத்தினர். இதன்படி தேனி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 13 பார்கள் தவிர அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த அனைத்து பார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஎஸ்பி பெரியசாமி உத்தரவின் பேரில் போலீசார் போடி பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பார்களை பார்வையிட்டு சீல் வைக்கும் நடவடிக்கை குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 10 பார்களுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். கம்பத்தில் புதிய பஸ் நிலையம் அருகே அனுமதி பெறாமல் இயங்கி வந்த டாஸ்மாக் பார் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் பார் இயக்குவதாக கம்பம் வடக்கு எஸ்ஐ இளையராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு டாஸ்மாக் பார் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாரில் பணியில் இருந்த கம்பம் அருகே உள்ள சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையை நடத்தி வந்த கம்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post போடி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய பார்களுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Theni district ,Tamil Nadu ,Tasmac ,Dinakaran ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது