புதுடெல்லி: புது நாடாளுமன்றம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கட்டிடத்தை கட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றக் கட்டிட பணிகள் முடிவடைந்து நாளை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். நம் நாடு பல்வேறு கலாசாரங்களை கொண்டது என்பதை பிரதிபலிக்கும் வகையில் கட்டிடத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
உபி மாநிலம் மிர்சாப்பூரில் இருந்து தரை விரிப்புகள், திரிபுராவில் இருந்து மூங்கில் விரிப்புகள், ராஜஸ்தானில் இருந்து செதுக்கப்பட்ட கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து, பச்சை கற்கள், அஜ்மீரில் இருந்து கிரானைட் கற்கள், அம்பாஜியில் இருந்து பளிங்கு கற்களும் கொண்டு வரப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்டிடத்துக்கு மேற்கூரை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் டாமன் மற்றும் டையூவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. கூட்ட அரங்கில் உள்ள இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்ட மரசாமான்கள் மும்பையில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நாடாளுமன்றத்தை அழகுபடுத்த பல மாநிலங்களில் இருந்து வந்த பொருட்கள் appeared first on Dinakaran.
