வால்பாறை: வால்பாறையில் கோடை விழா இன்று துவங்கியது. இதையொட்டி, வால்பாறை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று கோடை விழா துவங்கியது. இதையொட்டி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, வளாகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. அரங்கில் வனத்துறை, தோட்ட கலைத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, டேன் டீ உள்ளிட்ட அரசுத்துறை விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புறம் உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா இன்று காலை (26ம் தேதி) கொடியோற்றி வைத்து கோடை விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் வெங்கடாச்சலம், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், துணை தலைவர் செந்தில், வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பரதநாட்டியம், யோகா, மதியம் 12 மணி அளவில் நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடி ஆட்டம், நாய்கள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் நீலகிரி மாவட்ட குழுவினரின் படுகர் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இவ்விழா 3 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், ஆணையாளர் வெங்கடாச்சலம் கூறுகையில்:- ‘‘சுற்றுலா பயணிகள் வசதிக்காக வால்பாறை காமராஜ் நகரில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவும், ஸ்டேன்மோர் சாலையில் அமைந்துள்ள நகராட்சி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழலாம். மேலும் அரசு கல்லுாரி மைதானத்தில் பாரா செயிலிங் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நகரை சுகாதாரமாக வைத்துக்கொள்ள அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்’’ என்றனர்.
வால்பாறை திமுக நகர செயலாளர் சுதாகர் கூறியதாவது: ‘‘கோடை விழாவை முன்னெடுத்து நடத்த ஆணையிட்டு உதவிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் சிறப்பாக பணியாற்றி உள்ள நகராட்சி ஆணையாளர், பொறியாளர் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார். இந்நிலையில், கோடை விழாவை ஆண்டுதோறும் நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வால்பாறையில் கோடை விழாதுவக்கம்: 3 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.
