×

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து கொடி பட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமை பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா. யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா. வைகுந்த்,நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் நாளான நாளை இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3ம் நாள் விழாவில் அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனியும், 6ம் நாள் கற்பக வாகன பவனியும், 7ம் நாள் சிவப்பு சாத்தி கருடவா கனத்தில் வாகன பவனியும் நடக்கிறது. ஜூன் 2ம் தேதி மாலை 8ம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடி, கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதன் பிறகு இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதானம் நடக்கிறது. 9ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருகிறார். அடுத்த மாதம் 5ம்தேதி 11ம் திருவிழா நடக்கிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழானை முன்னிட்டு தினசரி காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

 

The post சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vaigasi festival ,Samitopu Aiya Vaikuntasamy ,Kannyakumari ,Vaikasi festival ,Samitopu Aiya Vaikuntasami ,Kannyakumari District ,Vaigasi ,Chamitopu Aya Vaikuntasamy ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...