×

ஊட்டியில் தாவரவியல் பூங்கா வளாகத்தில் கடையில் பேப்பர் கப்கள் பறிமுதல்; ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

*நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுவது கண்டறிந்து பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், ஸ்பூன், ஸ்ட்ரா, முலாம் பூசப்பட்ட காகித தட்டுககள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள், பிளாஸ்டிக் தோரணங்கள், கொடிகள் உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை கொண்டு வந்து விடுகின்றனர். இதை தடுப்பதற்காக அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. டீ கடைகள், உணவகங்கள், ஓட்டல்களில் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் உணவகம் மற்றும் கடையில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இப்புகாரை தொடர்ந்து ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள கடையில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பேப்பர் கப் பயன்படுத்தியதும், சுமார் 1000 கப் இருப்பு வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அதனை அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

The post ஊட்டியில் தாவரவியல் பூங்கா வளாகத்தில் கடையில் பேப்பர் கப்கள் பறிமுதல்; ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Botanical Park ,Oodi ,Feeder Botanical Park ,Tourism Development Corporation ,Feodder ,Dinakaran ,
× RELATED கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு