×

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. ரூ.1250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ஆனால், நாட்டின் முதல் குடிமகன் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதற்கிடையே நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ் அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டது. அதில், பிரதமர் மோடியே திறந்து வைப்பார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதோடு, அழைப்பிதழில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயரே இடம் பெறவில்லை. விழாவுக்கும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், திமுக, உட்பட 20 கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ”இந்திய அரசியல் சட்டப்பிரிவு 79ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும், அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றை உடனடியாக கூட்டவோ அல்லது கலைக்கவோ அதற்கான முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது. அதனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். அதுதான் மரபாகும். அதனை நிராகரிப்பது என்பது குடியரசுத் தலைவரின் மாண்பை குறைப்பது மட்டுமில்லாமல், அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் செயலாகும். அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மக்களவை செயலகத்திற்கு ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த மனு அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, நரசிம்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீத்த நீதிபதிகள், நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும் கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும் என கேள்வி எழுப்பி, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர். மேலும் இது போன்ற பொதுநல மனுக்களை விசாரிப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்தால் எதிர்காலத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதையடுத்து மனுதாரர் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரிய போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா, மனுதாரர் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.தொடர்ந்து பொதுநல மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்