×

திட்டக்குடி அருகே பரபரப்பு பெற்ற மகனையே கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை கைது

திட்டக்குடி, மே 26: திட்டக்குடி அருகே குடிபோதையில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொடிகளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விநாயகம் (28), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊரை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது தந்தை ஆறுமுகம் (60) விநாயகத்திடம் ஏன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுகிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன் தினம் நள்ளிரவும் வழக்கம்போல் விநாயகம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே குடிபோதையில் இருந்த அவரது தந்தை ஆறுமுகம், விநாயகத்திடம் இதுபற்றி கேட்டுள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவரது தந்தை ஆறுமுகம் விநாயகத்தை கத்தியால் இடது பக்க மார்பில் குத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறி சரிந்து விழுந்த விநாயகத்தை தூக்கி பார்த்தபோது இறந்துபோனது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாருக்கும் தகவல் சொல்லாமல் நெஞ்சு வலியில் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைத்து பிரேதத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததன்பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்ற மகனை தந்தையே கொலை செய்ததும், மற்றும் நெஞ்சுவலி என நாடகமாடி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் தேடினர். இந்நிலையில் ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் பெற்ற மகனை தந்ைதயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திட்டக்குடி அருகே பரபரப்பு பெற்ற மகனையே கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Thitakudy ,Thitakkudi ,Dinakaran ,
× RELATED கோயில் கேட் பிரச்னையில் தகராறு இரு தரப்பை சேர்ந்த 6 பேர் கைது