×

வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு பெறும் சேரங்கோடு அரசு பள்ளி

பந்தலூர், மே 26 : பந்தலூர் அருகே வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு பெறும் சேரங்கோடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் ஏழை எளிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படிக்கும் அரசு பள்ளிக்கு கோவையில் உள்ள தூரிகை அறக்கட்டளையினர் மாணவர்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் வரைந்து கொடுத்து, அசத்தியுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை பூபதி கூறுகையில், ‘‘கோவை தூரிகை அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே எங்கள் பள்ளி மாணவர்கள் விரும்பிய பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மாணவர்களை மகிழ்வித்தனர். மேலும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து, பள்ளி கட்டிடங்களுக்கு பெயிண்டிங் செய்து கொடுத்தனர். தற்போது தூரிகை அறக்கட்டளை நிர்வாகிகள் ரஞ்சித்குமார், சினேகா, செல்வா ஆகியோர், எங்கள் பள்ளிக்கு வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தியுள்ளனர். அதனால் வரும் கல்வியாண்டில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் புதிய மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு காரணமாக விளங்கும் தூரிகை அறக்கட்டளைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என தெரிவித்தார்.

The post வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு பெறும் சேரங்கோடு அரசு பள்ளி appeared first on Dinakaran.

Tags : Cherangode Govt School ,Bandalur ,Serangode Government School ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கான இடம் ஆய்வு