×

மேலும் பலர் சுட்டுக்கொலை பற்றி எரிகிறது மணிப்பூர்: அமைதிகாக்க அமித்ஷா வேண்டுகோள்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. அங்கு அமைதி திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் குகி மற்றும் மெய்ட்டி இன மக்கள் இடையே நடக்கும் மோதல் காரணமாக 22 நாட்களாக அங்கு பயங்கர கலவரம் நடந்து வருகிறது. 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்தும் இன்று வரை கலவரம் அடங்கவில்லை. இந்த கலவரத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.

2 ஆயிரம் வீடுகள் எரிக்கப்பட்டுவிட்டன. நேற்று பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தினம் தினம் புதிதாக வெடிக்கும் கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் பற்றி எரிகிறது. இந்தநிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அசாம் மாநிலம் சாங்சாராய் பகுதியில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலையின் 10 வது வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அமித்ஷா பேசும் போது:
நான் விரைவில் மணிப்பூர் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்குவேன். ஆனால் அதற்கு முன், இரு குழுக்களும் தங்களுக்குள் உள்ள அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தை நீக்கி, மாநிலத்தில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். மணிப்பூரில் வெடித்த மோதல்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்யும், ஆனால் அங்கு அமைதியை உறுதிப்படுத்த மக்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

6 ஆண்டுக்கு மேல் சிறையா? தடயவியல் ஆய்வு கட்டாயம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,’ 6 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றங்களுக்கு தடயவியல் நிபுணர்களின் நேரடி ஆய்வை கட்டாயமாக்குவதற்கான சட்ட மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது’ என்றார்.

கவுகாத்திக்கு போக முடியும் மணிப்பூருக்கு செல்ல முடியாதா?

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ மணிப்பூர் 22 நாட்களாக பற்றி எரிகிறது. ஆனால் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்ல ஒன்றிய உள்துறை அமைச்சரால் முடிகிறது. ஆனால் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு செல்ல நேரம் இல்லை. கர்நாடகா தேர்தலுக்காக 16 பேரணிகளில் பங்கேற்க முடிகிறது. ஆனால் இரட்டை என்ஜின் அரசு என்ற சித்தாந்தத்தால் சிக்கி அவதிப்படும் மணிப்பூர் மாநிலத்திற்கு போக முடியவில்லை’ என்று விமர்சித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் அஜோய்குமார் கூறுகையில்,’ மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு இருதரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post மேலும் பலர் சுட்டுக்கொலை பற்றி எரிகிறது மணிப்பூர்: அமைதிகாக்க அமித்ஷா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Amit Shah ,Imphal ,Home Minister ,Manipur… ,Dinakaran ,
× RELATED வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு