×

கலாச்சார பட்டியலில் இருக்கும் ஜல்லிக்கட்டை விளையாட்டு பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

புதுக்கோட்டை: கலாச்சார பட்டியலில் இருக்கும் ஜல்லிக்கட்டை விளையாட்டு பட்டியலுக்கு மாற்றுவது குறித்து முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1,391 பயனாளிகளுக்கு ரூ.25.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அங்கு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்படுத்தப்போகும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்தார்.

பின்னர் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வரின் உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், ஆட்சியர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்களுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த ஆய்வு கூட்டம் குறித்து முதல்வரிடமும் விவரங்களை தெரிவிப்பேன். ஜல்லிக்கட்டு போட்டி, கலாச்சார பட்டியலில் இருப்பதை விளையாட்டு பட்டியலுக்கு மாற்றுவது குறித்து முதல்வரிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சிலம்பாட்ட வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உள்விளையாட்டு அரங்கம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்ட தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருப்பது குறித்து விரிவான அறிக்கையை கலெக்டரிடம் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post கலாச்சார பட்டியலில் இருக்கும் ஜல்லிக்கட்டை விளையாட்டு பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Pudukkotta ,Chief Minister ,Jallikkat ,Jallikattu ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...