×

55,982 போலி சிம்கார்டுகள் விற்பனை தமிழ்நாடு முழுவதும் ஐந்து விற்பனையாளர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 55,982 போலி சிம்கார்டுகள் விற்பனை செய்த விவகாரத்தில், மாநிலம் முழுவதும் 12 வழக்குகள் பதிவு செய்து, சிம்கார்டுகள் விற்பனை செய்த 5 விற்பனையாளர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தேசிய சைபர் க்ரைம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மாநில சைபர் க்ரைம் போலீசாருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், தமிழகத்தில் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம்கார்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறை முக அடையாளம் காணும் மென்பொருளை பயன்படுத்தி தரவுகளை ஆய்வு செய்தபோது இது தெரியவந்தது.

அதன்படி தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட 55,982 சிம்கார்டுகளை ஒன்றிய தகவல் தொடர்புத்துறை முடக்கியுள்ளது. எனவே போலி ஆவனங்கள் மூலம் சிம்கார்டுகள் விற்பனை செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் பிரிவுக்கு அறிவுறுத்தி இருந்தது. அந்த அறிக்கையின் படி, மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார், போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் விற்பனை செய்ததாக விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளர்கள் மீது தனித்தனியாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, போலி சிம்கார்டுகள் விற்பனை செய்ததாக 5 சிம்கார்டு விற்பனையாளர்களை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து மாநில சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 55,982 போலி சிம்கார்டுகள் விற்பனை தமிழ்நாடு முழுவதும் ஐந்து விற்பனையாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...