×

இயற்கை காட்சி, இதமான காலநிலையை ரசிக்க கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோத்தகிரி: கொடநாடு காட்சி முனையில் மாலை நேரங்களில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை காட்சிகளை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை. இங்கிருந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகிறார்கள். கோடை காலத்தில் பெய்யும் சாரல் மழையால் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

தமிழக-கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர். மேலும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டியிலும் அலைமோதல்

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் கடந்த 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்த மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மலர் கண்காட்சி நேற்று முன்தினமே நிறைவடைந்த போதிலும், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

The post இயற்கை காட்சி, இதமான காலநிலையை ரசிக்க கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Gothagiri ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...