×

திருமணத்தடை நீக்கும் சிங்கமுகத் திருமகள்

சேய் ஆறு எனப்படும் செய்யாறின் கீழ் திசையில், பறவைகளின் குழலிசை நிரம்பி வழியும் ஆன்மிக மண்ணில், மெய்யெல்லாம் விழியாகி வியந்து நோக்கும் வகையில் வடக்கு தெற்காக படுத்திருக்கும் சிங்கத்தின் கம்பீரத் தோற்றத்துடன் காட்சி தருகிறார் நாராயணன். சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணிநாராயணபுரம் என்பதே இவ்வூரின் திருப்பெயர். வெங்கடாஜலபதி, அரங்கநாதர், வரதராஜ பெருமாள், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆகியோர் எழுந்தருளி அருட்பாலிக்கின்ற திருநகரங்கள் திருப்பதி, திருவரங்கம், காஞ்சிபுரம், சோளிங்கர், ஆவணியாபுரம். இத்தலங்கள் பஞ்ச திருப்பதிகள் என பக்தர்களால் போற்றப்படுகிறது.

பஞ்ச திருப்பதிகளுக்கும் நேரில் சென்று சேவித்து ஆன்ம நிறைவை, ஒரே இடத்தில் அடைய முடியும் என்றால் அது ஆவணியாபுரம்தான். இங்கு மலை உச்சியில் ரங்கநாதர், வெங்கடாஜலபதி, வரதராஜபெருமாள், யோக நரசிம்மர் ஆகிய நால்வரும் எழுந்தருள, கீழ் மலையில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆவணியாபுரத்து மலைமீது அமைந்துள்ள திருக்கோயில் கருவறையில் அமர்ந்த நிலையில் கொலுவிருக்கும் நரசிம்மருக்கு மட்டுமல்ல, அவரது இடபாகம் எழுந்தருளி திருமுகம் காட்டும் தாயாருக்கும் சிம்ம முகம். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஒரு முறை நான்முகன் இத்தலத்தில் நரசிம்மரை நோக்கி யாகம் செய்தார். யாகத்தில் நரசிம்மர் தோன்றியபோது அவரின் திருமுகம் யாகத் தீயால் கருகிக் காணாமல் போய்விட்டது. அதைப் பார்த்த மகாலட்சுமி, ‘இத்தலத்தில் தாங்கள் திருமுகம் இன்றி தரிசனம் தருவதா? அதை பக்தர்கள் ஏற்பார்களா? ஒரு மாற்று ஏற்பாடாக, தங்கள் சிம்ம முகத்தை எனக்கு அருளுங்கள். அந்த முகத்துடன் நான் தோன்றும்போது என்னில் தங்களையே தரிசிக்கும் நிறைவை பக்தர்கள் பெறுவார்கள்’ என வரம் கேட்டுப் பெற்றுக் கொண்ட அற்புதத் தலம் இது.

சர்வதாரி ஆண்டு ஆனிமாதம்தான் தாயார் சிம்மமுகம் பெற்ற நாள் என்பதால், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. சந்நதியின் எதிரில் எழுந்தருளும் கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இது, வேறு எந்தத் தலத்திலும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம்.
இக்கோயிலுக்கு மேலும் பல சிறப்பம்சம் உண்டு. நவ நரசிம்மரை சேவித்த பலன்களை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமிநரசிம்மர் கருவறையில் மூன்று நரசிம்மரும், தாயார் சந்நதி அருகே பஞ்ச நரசிம்மர்களும், மலை உச்சியில் உள்ள சந்நதியில் யோக நரசிம்மருமாக நவ நரசிம்மர்களாக இக்கோயிலில் காட்சியளிக்கின்றனர்.

கீழ்மலையில் உள்ள சந்நதியின் மேற்கு திசையில், வில் ஏந்திய வீர ஆஞ்சநேயர் அருட்காட்சி அருள்கிறார். பல்லவர் காலத்து கட்டிடக் கலைக்கு சாட்சியாக நிற்கும் இத்திருக்கோயிலில், ஆழ்வார்களின் பிரதிஷ்டை இல்லை. எனவே, இக்கோயில் ஆழ்வார்களின் காலத்துக்கும் முற்பட்டதாகும். அலர்மேலு மங்கை தாயாருக்கு தனி சந்நதியும், அதனருகில் பஞ்ச நரசிம்மர், அழகிய கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் திவ்ய தரிசனம் அளிக்கின்றனர். மேல் மலையில், பெருமாளுக்கு அமைக்கப்பட்ட தனி சந்நதிக்கு அருகில், ரங்கநாதர், வரதராஜர், யோக நரசிம்மர், அமிர்தவல்லித் தாயார் ஆகியோரும் பக்தர்களுக்கு அருள்மழை பொழிகின்றனர்.

பகவான் நாராயணன் சிங்க முகத்துடனும், மனித உடலுடனும் அவதாரம் கொண்டு இரணியனை வதம் செய்து பக்தன் பிரகலாதனுக்கு அனுக்ரகம் செய்தார். அப்போது, நாராயணனின் சிங்க முகத்தையும் உக்கிரத்தையும் கண்டு அஞ்சி, நடுங்கிய பிரகலாதன் கைகூப்பி வணங்கினான். சாந்த திருவடிவாக, ஸ்ரீதேவி லட்சுமி தாயாருடன் காட்சிதர வேண்டும் என்றும் வேண்டினான். பக்தன் பிரகலாதனின் மீது கருணை கொண்ட திருமால், லட்சுமிதாயாரை தன் இடபாகத்தில் அமர்த்திக்கொண்டு சாந்த வடிவாக காட்சி தந்தார்.

இரணியனை வதம் செய்த நாராயணனை, தேவர்கள் அனைவரும் பணிந்து வணங்கினர். சிம்ம வடிவாகவே காட்சியளித்து உலகத்தை காத்தருள வேண்டும் என்று வரம் வேண்டினர். தேவர்களின் உள்ளத்து வேட்கையை நிறைவு செய்ய விரும்பிய நாராயணன், ‘‘ஆவணிநாராயணபுரம் எனும் திருத்தலத்தில் உள்ள சிம்மாச்சல மலையில் வெப்பால மரங்களாக நின்று தவம் செய்து வாருங்கள், பிருகு முனிவருக்கு அந்த மலையில் காட்சியருளி அங்கேயே அர்ச்சாவதாரமாகவும் நான் காட்சியளிப்பேன்’’ என்று வரம் அருளினார்.

பல இடங்களில் தவமிருந்தும் முக்தி கிடைக்காத பிருகு மகரிஷி, நிறைவாக ஆவணிநாராயணபுரத்து சிம்மாச்சல பர்வதத்தில் தவம் மேற்கொண்டார். அவரது தவத்தால் மனம் இரங்கிய நாராயணன், ஸ்ரீலட்சுமி நரசிம்ம ரூபமாக காட்சியருளினார். அதோடு திருப்தியடையாத பிருங்கி மகரிஷி, ஐந்து அவதாரங்களாகவும் இங்கு எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த விருப்பத்தையும் நிறைவேற்றிய நாராயணன், லட்சுமி தேவி சமேத நரசிம்மராக, ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதராக, ஸ்ரீஅமிர்தவல்லி தாயார் சமேத யோக நரசிம்மராக, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாளாக, அலர்மேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாளாக காட்சியளித்தார்.

ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்திலும் ஊஞ்சல் உற்சவம், ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வெங்கடாஜலபதி கிரிவலம், மாசி மகத்தன்று பில்லாந்தி கிராமத்தில் எழுந்தருளல், பங்குனி உத்திரத்தில் சோழவரத்தில் எழுந்தருளல் மற்றும் திருக்கல்யாண உற்சவம், சித்ரா பவுர்ணமி தினத்தில் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பிரம்மோற்சவத் திருவிழா என்று ஆவணியாபுரமே களைகட்டும்.

வைகாசி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு விழாக்கள், 3வது சனிக்கிழமை அன்று வெங்கடாஜலபதி கருடசேவை, ஐப்பசி மாத தீபாவளி தினத்திலும், கார்த்திகை மாத விஷ்ணு தீபத்தன்று திருமஞ்சனம், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி மற்றும் தை மாத பொங்கலன்று மந்தைவெளி புறப்பாடு. மேலும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு விழாக்கோலம்தான்.

இரவு முழுவதும் வார வழிபாடு மற்றும் மணிபால சுவாமியின் பஜனை கச்சேரியும் நடைபெறும். சனிக்கிழமை இரவு இக்கோயிலில் பக்தர்கள் தங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமாலின் அவதாரமான இந்த நரசிம்மர், திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் பேரருள் புரிந்து வருகிறார். அதோடு, இப்பகுதியிலுள்ள விவசாயப் பெருமக்களுக்கு இந்த லட்சுமி நரசிம்மர் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.

தாம் பயிரிடும் தானிய விளைச்சலை அமோகமாக்கும் நரசிம்மருக்கு துலாபாரமாக நெல்லையும், நிலக்கடலையையும் அர்ப்பணிக்கிறார்கள் விவசாயிகள். அந்த வகையில் ஒரு வருடத்தில் சுமார் 5000 மூட்டையளவு அந்த தானியங்கள் காணிக்கையாக வழங்கப்படுகிறதாம்.

தினசரி காலை 6 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமைஅன்று பகல் 1 மணி வரையும், இரவு 11 மணி வரையும் திறந்திருக்கும். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் அமைந்திருக்கிறது. ஆரணியில் இருந்து 13 கி.மீ. தூரத்திலும், வந்தவாசியிலிருந்து 27 கி.மீ. தூரத்திலும் இக்கோயில் உள்ளது.

தொகுப்பு: மகி

The post திருமணத்தடை நீக்கும் சிங்கமுகத் திருமகள் appeared first on Dinakaran.

Tags : SINGAMUMUKUD MARRIVER ,Sai Six ,Meyellam ,SINGAMUMUKATH MARRITARIM ,
× RELATED மார்கழி மாதமும் பரங்கிப்பூவும்!