×

மதுரையில் திடீர் போக்குவரத்து நெரிசல்; 3 மணிநேரம் ஸ்தம்பித்தது ரிங் ரோடு: 1.5 கிமீ தூரம் வாகனங்கள் நகர முடியாமல் நின்றதால் பொதுமக்கள் பரிதவிப்பு

மதுரை: மதுரையில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ரிங்ரோட்டில் நாலாபுறமும் ஒன்றரை கிமீ தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் தேங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே வாகனங்கள் ஊர்ந்து நகர்ந்து சென்றன. மதுரையில் போக்குவரத்து நெரிசல் போக்கும் வகையில் ரிங் ரோடு, பாலங்கள் என பலதரப்பட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர் முகூர்த்த தினத்தை ஒட்டி நேற்று மதுரைக்கு வாகனங்கள் வருகையும், நகரிலிருந்து வெளியூர்களுக்கு திரும்பும் வாகனங்களும் என எண்ணிக்கை எகிறியது. நேற்று பகல் 1 மணிக்கு மேல் வண்டியூர் அருகே ரிங்ரோட்டில் வாகனங்கள் பெருமளவில் தேங்கின. முன்னதாக நேற்று காலை, ராமநாதபுரம் ரிங்ரோடு ரவுண்டானா பகுதியில் திருச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக கன்டெய்னர் வாகனம் ஒன்று ரவுண்டானா அருகே திடீரென பழுதாகி நின்றது.

போக்ககுவரத்து போலீசார் ஜேசிபி உள்ளிட்டவைகள் மூலம் இந்த வாகனத்தை ஓரப்பகுதிக்கு கொண்டு சென்றனர். நேற்று பகலில் இந்த வாகனத்தின் அருகே, தடுப்புகளை போட்டு பழுதான வாகனத்தை சிலர் வேலை பார்த்தனர். இதனால் சாலையின் ஒரு பகுதியில் பிற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே முகூர்த்த தினத்தால் வாகன எண்ணிக்கை அதிகரிப்பினால் முக்கி முனகி வாகனங்கள் கடந்த நிலையில், இந்த கன்டெய்னர் வாகனம் பழுதாகி நின்றிருந்த பகுதியிலும் பெருமளவு வாகனங்கள் கடக்க முடியாது தேங்கியது.

இதனால், ராமநாதபுரம், நெல்லை, விரகனூர் பகுதிகள், தெப்பக்குளம் பிரியும் இடம் என பல்முனைகளிலும் வந்த வாகனங்கள் நேற்று பகல் 1 மணியளவில் ஒரே நேரத்தில் தேங்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் இப்பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளானது. சிலைமான், நகர் போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்து, நெரிசலை சரிப்படுத்தினர். நான்கு புறங்களிலும் சுமார் ஒன்றரை கிமீட்டர் தூரத்திற்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், வாகன ஓட்டிகள் சுமார் 3 மணிநேரம் நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

The post மதுரையில் திடீர் போக்குவரத்து நெரிசல்; 3 மணிநேரம் ஸ்தம்பித்தது ரிங் ரோடு: 1.5 கிமீ தூரம் வாகனங்கள் நகர முடியாமல் நின்றதால் பொதுமக்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ring Road ,Dinakaran ,
× RELATED பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல்