×

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் முடிவது எப்போது?:ஆற்காடு, வேப்பூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

ஆற்காடு: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், ஆற்காடு, வேப்பூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையானது நாட்டின் சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்திற்கு முதன்மையானதாக உள்ளது. நமது நாட்டில் உள்ள மாநில தலைநகரங்கள், முக்கிய துறைமுகங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,606 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 1,472 கி.மீ நீளமுள்ள சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலமாகவும், மீதமுள்ள 5,134 கி.மீ நீளமுள்ள சாலைகள் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்துதல், மேம்படுத்துதல், உறுதிப்படுத்துதல், தரம் உயர்த்துதல், பாலங்களை மறுசீரமைத்தல், புதியதாக கட்டுதல், திரும்ப கட்டுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு நாட்டின் அனைத்து பொருட்கள் பரிமாற்றத்திற்கான வழியாக, முதுகெலும்பாக திகழ்வது சாலைகள் தான். நாட்டின் தொழில் மற்றும் போக்குவரத்து வளர்ச்சியை நவீனமயமாக்க அதிக நவீன வடிவில் விரைவு சாலைகளை அரசு தற்போது அமைத்து வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகள் தற்போது விரிவுபடுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் பல வழி சாலைகளாக உருமாறி வர துவங்கியுள்ளது. இதனால் கால நேரம் மிச்சமாவதுடன் பயணக் களைப்பை தவிர்த்து உரிய பொருட்கள், உரிய இடத்தில், உரிய காலத்தில் சேர்க்கும் கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் சாலைகள் உருவாகி வருகின்றன.

சாலைகள் அதிவிரைவு சாலைகளாக உருமாறி வரும் வேளையில் விபத்துக்கள் பெருகும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அதில் சாலைகளில் விபத்துகளை தவிர்க்க அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் கட்டுதல் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதேபோல், சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக, பயண நேரத்தை குறைக்க தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி, மேல்விஷாரம், ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஆற்காடு, வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆற்காட்டிலிருந்து சென்னை செல்லும் வாகனங்களும், வேலூரிலிருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் வாகனங்களும் பாலாற்று புதிய பாலம் வழியாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதேபோல் வேப்பூர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் மேம்பாலங்கள் கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். மேலும் மேம்பாலங்கள் கட்ட வலியுறுத்தி பல போராட்டங்களும் நடைபெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் முயற்சியின் பேரில் ஆற்காடு, வேப்பூர் பகுதியில் மேம்பாலங்கள் கட்டவும், சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து அந்த பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆற்காடு பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் தற்போது இரண்டு ராட்சத சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அந்த சுவற்றில் உள்ள இரும்பு கம்பிகளும் துருப்பிடித்த நிலையில் உள்ளது. அங்கு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் வேப்பூர் பகுதியில் சப்வே கட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தூரத்திற்கு சிறிய குறுகலான பாதையில் வாகனங்கள் அனைத்தும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆற்காடு பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் ஆரம்ப கட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்ற பணிகளில் எதற்காக தொய்வு ஏற்பட்டது என்பதும், வேப்பூர் பகுதியில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் பேரில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் முடிவது எப்போது?:ஆற்காடு, வேப்பூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai-Bengaluru ,highway ,Arcot ,Chennai-Bengaluru National Highway ,Veypur, Arcot ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!