×

நெல் கொள்முதல் செய்யாததால் ஆத்திரம்: விவசாயிகள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கண்டித்து நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் அங்கு தேங்கி கிடக்கின்றன. தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களுக்கு பெரிய அளவிலான இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத அதிகாரிகளை கண்டித்தும், தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மதுராந்தகம் நுழைவாயில் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post நெல் கொள்முதல் செய்யாததால் ஆத்திரம்: விவசாயிகள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Madurandagam ,Government Direct Paddy Procurement Station ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...