×

வீட்டை ஜாக்கி மூலம் தூக்க முயன்றபோது சீலிங் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி: இருவர் படுகாயம்

சென்னை: தாம்பரம் அருகே 2 மாடி வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துவதற்காக ஜாக்கி மூலம் தூக்க முயற்சித்தபோது, சீலிங் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாம்பரம் அடுத்த சேலையூர், கர்ணம் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (60). இவரது, 2 மாடி வீடு மிகவும் தாழ்வாக இருந்ததால், தரைத்தளத்தில் இருந்து உயர்த்துவதற்காக முடிவு செய்தார்.

இதற்கான பணிகள் கடந்த 14ம்தேதி துவங்கப்பட்டு, கட்டிட மேஸ்திரிகள் சுந்தர்ராஜ், ஆரோன் ஆகியோர் மூலம் வட மாநிலத்தை சேர்ந்த 11 கூலி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இக்கட்டிடத்தை உயர்த்துவதற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வீட்டின் கட்டிடத்தின் தரைத்தளத்தை உயர்த்தியபோது, திடீரென முதல்மாடி சவர் சீலிங் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து சேலையூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், தென் சென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையில், தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனத்தில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பேஸ்கார் (20). என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஓம்கார் (20) என்பவருக்கு, கால் எலும்பு முறிவும், மற்றொருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சேலையூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணியின்போது கட்டிட பொறியாளர் அருகில் இல்லை எனவும், கூலி தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டை ஜாக்கி மூலம் தூக்க முயன்றபோது சீலிங் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி: இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Jockey ,Thambaram ,Jackie ,
× RELATED தாம்பரம்- செங்ேகாட்டை வாரம் மும்முறை...