டெல்லி: இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை தற்பொழுது ஓய்ந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டும் கடுமையாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெயில் வாட்டி வதைத்தது. தமிழ்நாட்டிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிலவி வருகிறது. இதனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம். நீர்ச்சத்து மிக்க ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசும் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை தற்பொழுது படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 6 மாநிலங்களில் மலைப் பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை தற்பொழுது ஓய்ந்திருப்பதால் இன்று கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
The post இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது.. அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

