×

நாடாளுமன்றம் என்பது ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: : நாடாளுமன்றம் என்பது ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர எம்பிக்களுக்கான கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி இதனை திறந்துவைக்க உள்ளதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது. ஆனால், இந்தத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி; “நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்; ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம், அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

The post நாடாளுமன்றம் என்பது ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல: ராகுல் காந்தி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...