×

சயனைடு கலந்த மது குடித்து இறந்தவரின் நண்பர்கள், பார் ஊழியர்களிடம் தனிப்படை கிடுக்கிப்பிடி விசாரணை

தஞ்சை: தஞ்சை கீழவாசல் கொண்டிராஜ பாளையம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை பாரில் விற்ற மதுவை குடித்த குப்புசாமி (68), குட்டி விவேக் (36) ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். விசாரணையில் இவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குனர் ஜெயா தலைமையில் உதவி இயக்குநர் காயத்ரி, டவுன் டிஎஸ்பி ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை திறந்து அதன் மற்றொரு வாசல் வழியாக பாருக்குள் சென்றனர்.

தொடர்ந்து எஸ்பி ஆஷிஷ் ராவத், கூடுதல் எஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். தடயங்கள், கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள மீன் மார்க்கெட்டில் இறந்து போன விவேக்கின் சகோதரர் கடையான வினோத் கடைக்கு சென்று ஏதாவது தடயங்கள் உள்ளதா எனவும் சோதனை நடத்தினர். அங்கிருந்த மீன் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கூறுகையில், விவேக்குக்கு வெளிநாட்டு மது எனக்கூறி நண்பர்கள் மதுபாட்டிலை கொடுத்துள்ளனர். விவேக் அந்த மதுபாட்டிலை எடுத்துக் கொண்டு டாஸ்மாக் பாருக்கு சென்று கொஞ்சம் குடித்துள்ளார்.

இவரை தொடர்ந்து பாருக்கு சென்ற குப்புசாமியும் விவேக்கிடம் இருந்த மதுவை வாங்கி குடித்துள்ளார். பின்னர் பாரை விட்டு வெளியே வந்த அவர்கள், வாந்தி எடுத்து மயங்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விவேக்கின் நண்பர்கள், டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் தனியாக விசாரணை நடந்து வருகிறது. விரைவில் சயனைடு கலந்த மது பாட்டில் யார் கொடுத்தது என்பது தெரியவரும் என்றனர்.

The post சயனைடு கலந்த மது குடித்து இறந்தவரின் நண்பர்கள், பார் ஊழியர்களிடம் தனிப்படை கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thanjana ,Kuppusamy ,Tasmak Shop Bar ,Thanjana Lower Kondraja Palayam ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு