×

திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி அழகாய் அசைந்தாடும் யானைகளை கண்டு வியப்பு

*காட்டெருமைகள், மிளா மான்கள் பவனி

*வனவிலங்கு வேட்டை தடுக்கப்பட்டுள்ளது

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் சீறும் சிறுத்தை, யானைகளின் ஒய்யார பவனி, மிரட்டும் காட்டெருமைகள், மிரளும் மிளாமான் என கணக்கெடுப்பாளர்களை சுவராஸ்யமடையச் செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடக்கும். இதன்படி, கடந்த மே 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. புலிகள் காப்பகத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வனப்பகுதி மிகவும் அடர்த்தியான வனப்பகுதியாகும். நூறாண்டுகளை கடந்த உயரமான பெரிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், ராஜ நாகங்கள், காட்டெருமைகள், பெரிய மலைப்பாம்புகள், மரநாய்கள், நரிகள், மான்கள், செந்நாய்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

முந்தைய கணக்கெடுப்பில் 70 யானைகள்

இந்த வனப்பகுதியில் இதற்கு முன் நடந்த கணக்கெடுப்பில் சுமார் 70க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறை நடந்த தென்மாநில அளவிலான கணக்கெடுப்பில், திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 40 பீட்டுகளில் சுமார் 120 வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இவர்களுக்கு திருவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மைய அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சியை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப்குமார் வழங்கினார். அதன்பின் வனத்துறை ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான யானை தடயங்களையும், எச்சங்களையும் பதிவு செய்து வந்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் சிலர் யானைகளையும் பார்த்துள்ளனர். இந்த வனப்பகுதியில் மிரட்டும் காட்டெருமைகள், அச்சுறுத்தும் புலிகள், துள்ளி விளையாடும் குட்டிகளுடன் காட்டெருமைகள், கூட்டம், கூட்டமாக சுற்றும் யானைகள், மிளா மான்கள் வசிக்கின்றன.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்த பின்னர் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர். புலிகளுக்காக வைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதனால், புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு வேட்டை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகளின் எண்ணிக்கையும் கடந்த காலங்களை விட, கூடுதலாக இருக்கும். கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புத்தூர் வனப்பகுதியில் அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் மலை அடிவாரப் பகுதிகளில், யானைகள் சுற்றி திரிவதை காணலாம். யானைகள் கணக்கெடுப்பு விவரங்கள் அனைத்தும் முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தகவல் வந்தவுடன்தான் யானைகள் பற்றிய முழுமையான எண்ணிக்கை தெரிய வரும்’’ என்றார்.

குழந்தைகளுக்கு பிடித்த ஆனை பாடல்

இன்றும் திருவிழா, கோயில்கள் மற்றும் வெளியிடங்களில் யானையை பார்த்தவுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் குதூகலமாகிவிடுவார்கள். அந்த அளவிற்கு குட்டி யானையின் குறும்புகளை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ‘‘ஆனை.. ஆனை.. அழகர் ஆனை, அழரும் சொக்கரும் ஏறும் ஆனை…’’ யானைக்கு என்று குழந்தைகள் பாடல் கூட உள்ளது. தெருக்களில் அசைந்தாடி வரும் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, யானையில் துதிக்கையில் தண்ணீர் ஊற்றி பீய்ச்சி அடிப்பது என யானைகளுடன் குழந்தைகளுக்கு உண்டான பந்தம் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

ஆச்சரியமூட்டும் தகவல்கள்

*யானை ஒரு நாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்காக செலவு செய்கிறது. இவற்றின் செரிமானத்திறன் என்பது மிகவும் மந்தமானது. யானைகள் உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது. எனவே அளவுக்கு அதிகப்படியான உணவு இவை உட்கொள்ள வேண்டி உள்ளது. யானைகள் நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கிறது.

*யானைக்குடும்பத்தில் மூன்று சிற்றினங்கள் தான் உலகில் இன்றளவும் உள்ளது. அவை ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானைகள், ஆசிய யானைகள். இவை இனங்களுக்கு தக்க, நிலத்திற்கு ஏற்ப குணங்கள் மாறுபடும்.

*யானையின் துதிக்கை மிகவும் விஷேசமானது. அது 40,000 தசைகளால் ஆனது. அதனை கொண்டு பெருமரக்கிளைகளை உடைக்க முடியும், பெரும் சுமைகளை தூக்க முடியும். ஆனால் பெரும்பாலும் உணவை எடுக்கவும் நீர் குடிக்கவும் பயன்படுத்துகிறது.

*யானை தந்தங்களுக்கு யானைக்கோடு என்று பெயர் உண்டு. இந்த கோடானது யானையின் கடவாய் பற்களின் நீட்சியாக உள்ளது. தந்தம் என்றால் பல் என பொருள்படும். சரியாக ஒரு யானையின் தந்தம் சுமார் 10 அடி வரை வளரும். அதோடு அவற்றின் எடையும் 90 கிலோ வரை கனக்கக்கூடியவை.

The post திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி அழகாய் அசைந்தாடும் யானைகளை கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Meghamalai Tiger Reserve ,Bhawani ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்...