×

சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக 23.5.2023 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா

தமிழ்நாடு முதலமைச்சர், டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலரிடம், இந்தியாவில் தென் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தெற்காசிய நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார். டமாசெக் நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள காற்றாலைகளை வலுப்படுத்தவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் டமாசெக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார். தற்போது இளம் தொழில் முனைவோர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருவதால் Startup நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய தொழில்களை தொடங்கி வருகிறது. இந்த Startup நிறுவனங்களில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் மொத்த உணவு பதப்படுத்தல் துறையில் தமிழ்நாடு தற்போது 8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்றும், தமிழ்நாடு அரசு உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்களை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருவதால், அவற்றில் டமாசெக் நிறுவனத்தின் முதலீடு தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், சிங்கப்பூரின் எதிர்கால உணவு பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் Fintech city என்ற நிதி நிறுவனங்களுக்கான தனியான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அவற்றிலும் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலர் அவர்கள், தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்கிம்யின் வாங்க்

தமிழ்நாடு முதலமைச்சர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலக அளவில் செம்ப்கார்ப் நிறுவனம் சிறப்பான இடத்தை வகிக்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம் என்றும், எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, pumped hydro storage திட்டங்களுக்கான வழிமுறைகளை தற்போது இந்திய அரசு எளிமையாக்கி உள்ளதால், PPP முறையில் இந்தத் திட்டங்களை தமிழ்நாட்டில் செம்ப்கார்ப் நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கூட்டாக நிறைவேற்றிட கேட்டுக் கொண்டார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதால், பசுமை எரிசக்தி உற்பத்திக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுவதை குறிப்பிட்டு, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலம் தமிழ்நாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா

இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் பல்வேறு புதிய தளங்களில் கால் பதித்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். உலகின் மிகச்சிறந்த தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள ‘சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்’ போன்ற பல்வேறு பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளித்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மேற்கண்ட நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இந்நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வதற்கு தங்கள் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தனர்.

The post சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Singapore ,Tamil Nadu ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...