×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்: அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் நேற்று காலமானார். அவரது உடலுக்கு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குநரும், கருமுத்து தியாகராஜர் செட்டியாரின் மகனுமான கருமுத்து கண்ணன் (70) உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். தொடர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கே.ஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான எம்.பி கனிமொழி, வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கருமுத்து கண்ணன் உடல் அடக்கம், இன்று (புதன்) பிற்பகல் 2 மணியளவில், மதுரை கோச்சடையில் நடைபெறுகிறது. கருமுத்து கண்ணன், கடந்த 2001ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக பொறுப்பேற்றார். மேலும் மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராஜர் மேலாண்மைக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளராகவும் இருந்தார். இவருக்கு மனைவி உமா, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார்: அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatshi Amman Temple ,Dakar Karumuthu Kannan ,Madurai ,Madurai Meenatchi Amman Temple ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை