×

ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி கூட்டுறவு வங்கிகளில் ரூ.2 ஆயிரம் வாங்க மறுப்பு: விவசாய, நகைக்கடன் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

குலசேகரம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலியாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் வாங்க மறுப்பதால் நகை கடன், விவசாய கடன் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். இந்தியா முழுவதும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் நோட்டுகளை செப்டம்பர் 30 வரை அனைத்து வங்கிகளிலும் மாற்றிகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் பல நிறுவனங்களில் இப்போதே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வங்கிகளுக்கு சென்று மாற்ற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை விட கிராமப்புறங்களில் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள்தான் அதிகம்.தமிழகம் முழுவதும் 4,574 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இந்த சங்கங்களின்கீழ் நியாயவிலைக்கடை உள்பட பல தொழில் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயம் மற்றும் நகை கடன், சுயஉதவி குழுக் கடன் என பல பயன் தரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இந்நிலையில், விவசாய கடன் மற்றும் நகைகடன் உள்ளிட்டவற்றை செலுத்துவதற்காக பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டுவந்தால், அதனை கூட்டுறவு வங்கிகளில் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள் தேசிய வங்கிகளில் மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதுவே கடந்த 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கூட்டுறவு சங்கங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், கடன்களை செலுத்தவும் அனுமதிக்கப்பட்டது போல, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை விவசாய கடன் மற்றும் நகை கடன்களுக்கு செலுத்தவும், நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி கூட்டுறவு வங்கிகளில் ரூ.2 ஆயிரம் வாங்க மறுப்பு: விவசாய, நகைக்கடன் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Kulasekaram ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை...