×

மாம்பழ மாவட்டத்தில் இலை கட்சியின் கூட்டத்தை கூட்டி சேலம்காரருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வைத்தியின் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரர் முகாமில் உள்ள வைத்தியானவரின் அடுத்த இலக்கு சேலம்தானாமே… அங்கே என்ன செய்யப்போறாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரரின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவரின் மாவட்டமான நெற்களஞ்சிய மாவட்டத்தில் சேலம்காரரின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய சேலம்காரர், வைத்தியானவரின் அரசியலில் கால்வாரி விடுவதை வழக்கமாக கொண்டவர் என பர்சனல் மேட்டர்களை குறிப்பிட்டு ஆவேசமாக பேசினாராம். இந்த கூட்டமே தேனிகாரருக்கு எதிரானது இல்லையாம். அவரை வழிநடத்தும் வைத்தியானவருக்கு செக் வைக்கதானாம். எனவே தான் நெற்களஞ்சியத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது என்ற ரகசியம் வைத்தி தரப்புக்கு லீக் ஆச்சாம். இதனால் சேலம்காரருக்கு எதிராக, அவருடைய சொந்த மாவட்டத்திலே பிரமாண்டமான அளவில் பொதுக்கூட்டம் நடத்த வைத்தியானவர் தேனிக்காரர் மூலம் முடிவு செய்துள்ளாராம். இந்த பொதுக்கூட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க அதிக அளவில் கூட்டத்தை காட்டுவதோடு சேலம்காரருக்கு செக் வைக்கவும் தேனிக்காரர் முடிவு செய்துள்ளார். இதற்கான பொறுப்பை வைத்தியானவரிடம் ஒப்படைப்படுக்கப்பட்டுள்ளதாம். சொந்த மாவட்டத்திலேயே சேலம்காரரை பழி தீர்க்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என நினைத்த வைத்தியானவர், அவரது ஆதரவாளர்களுடன் அங்கு முகாமிட்டு இருப்பதோடு அதற்கான திரைமறைவு வேலைகளில் இறங்கியுள்ளாராம். இதனால் ‘வைட்டமின் ப’ கொடுத்தாவது பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டி விட வேண்டும் என வைத்தியானவரின் ஆதரவாளர்கள் களத்தில் கரன்சியோடு இறங்கி இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை தலைவருக்கு ஷாக் கொடுத்த பெண் தலைவரை பற்றி சொல்லுங்களேன் கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டத்தில் தாமரை கட்சியின் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதை, உணர்ந்த அக்கட்சியின் தலைமை, இம்முறை மாநில செயற்குழு கூட்டத்தை கோவையில் நடத்த வேண்டும் என முடிவு செய்தது. அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு, தாமரை தலைவர் பிரதர்மவுன்டன் தலைமை தாங்கினார். இதுல, முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், தாமரை அணியின் பெண் தலைவர் கூட்டத்துக்கே வரவில்லையாம். இது, கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் நெருடலை உண்டாக்கியதாம். ஆனாலும், அந்த அம்மணிக்கு, கீழ்நிலையில் உள்ள மகளிர் அணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகிட்டாங்களாம். ஆனால், பெண் மக்கள் பிரதிநிதி கடைசி வரை வரவில்லையாம். காரணம், அவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லையாம். இதனால், அம்மணி ரொம்பவே கோபத்தில் இருக்கிறாராம். பிரதர்மவுன்டனுக்கும்.. ஸ்கை பெண்மணிக்கும் ஆரம்பத்தில் இருந்தே இந்த முட்டல், மோதல் தானாம். மாநில தலைவருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தான் மாநில செயற்குழு கூட்டத்துக்கே அந்த பெண் மக்கள் பிரதிநிதி புறக்கணித்தாராம். சிறிதாக ஆரம்பித்த இந்த மோதல் தற்போது பெரிய அளவில் வெடித்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிவலம் மாவட்டத்தில் கான்டிராக்டர்களை திணறடிக்கிறாராமே அதிகாரி…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல பாளையம், வலம், கம் என்று முடியுற பேரூர் ஆட்சிகள் இருக்குது. இந்த 3 பேரூர் ஆட்சிக்கும் ஒரே ஒரு இளநிலை இன்ஜினியர் தான் இருக்காராம். இவர் தான் அந்த 3 ஏரியாவுக்கும் வளர்ச்சி பணி, டெண்டர் பணி, திட்ட பணிகள்னு எல்லாத்தையும் பார்க்கணுமாம். அதோட பில் பாஸ் செய்றது, திட்டபணிகளை ஆய்வு செய்றதரதன்னு அதையும் இவர்தான் பார்க்கணுமாம். பல வேலைகளை பார்க்குறதால, எங்க, எந்த வேலை பார்க்கிறாருன்னே தெரியலையாம். எங்கேயும் எந்த வேலையும் நடக்காம அப்படியே நிற்குதாம். இதனால லட்சக்கணக்கில் கடன் வாங்கி வட்டி கட்ட குறித்த காலத்தில் பில் தொகை கிடைக்காம ஒப்பந்தக்காரங்க அவதிப்பட்டு வர்றாங்க. அதோட, புது திட்ட பணிகளும் நடக்க மாட்டேங்கு என்று கான்டிராக்டர்கள் புலம்பினாலும் அதிகாரி காதில் வாங்கும் சூழலில் இல்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சமூக விரோதிகளுக்கு காக்கிகள் யார் உதவறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டம் ஒன்றில் சமீப காலமாக கடை இடிப்பு விவகாரம் பெரிய அளவில் பேசப்படும் விவாதமாக மாறி இருக்காம். வாடகை பிரச்னை, இட பிரச்னையில் உள்ள கட்டிடம், கடைகளை இடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்காம். இவர்களை அணுகினால் போதும், ஒரே நாள் இரவில் அந்த கடை, கட்டிடத்தை இடித்து துவம்சம் செய்து விடுகிறார்களாம். இட உரிமையாளருக்கு சாதமாக இவர்கள் இடிப்பு சம்பவத்தை செய்ய லட்சக்கணக்கில் கரன்சியை பெறுகிறார்களாம். இந்த இடிப்பு கும்பலுடன், காக்கிகள் சிலரும் ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்களாம். மாவட்ட காக்கி உயரதிகாரிகள் இல்லாத நாளாக பார்த்து தான் இடிப்பு சம்பவத்தை இந்த கும்பல் செய்கிறதாம். அதிகாரிகள் இல்லை. இன்னைக்கு களமிறங்குங்க என்று காக்கிகள் சிலர் தான், இவர்களுக்கு உளவு சொல்பவர்களாக உள்ளார்களாம். இடிப்பு பிரச்னையில் பாதிக்கப்பட்டவங்க காவல் நிலையம் போனாலும், பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைப்பது இல்லை என பேசிக்கிறார்கள் என்றார் விக்கியானந்தா.

The post மாம்பழ மாவட்டத்தில் இலை கட்சியின் கூட்டத்தை கூட்டி சேலம்காரருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வைத்தியின் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mango district ,Salemkar ,Salemtanam ,Peter ,Salemgarh ,
× RELATED இலை கட்சியில் பிளவை தடுக்க அணிகளை...