
கொல்கத்தா: டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் முறியடிக்க, எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி, அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். முதல்கட்டமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர் நேற்று சந்தித்து பேசினார். பாஜ அல்லாத மாநில முதல்வர்களையும் சந்தித்து ஒன்றிய அரசுக்கு எதிராக அவர் ஆதரவு திரட்ட உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதைத் தொடர்ந்து, பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதில் வலுவான முடிவு எட்டப்படவில்லை என்றாலும் கூட, மாநிலங்களவையில் பாஜவை கட்டுப்படுத்துவதில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்தநிலையில், சமீபத்தில் டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றி உள்ளது. டெல்லியில் ஆட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் சக்சேனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவல்துறை, பொது அமைதி, சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான சேவைகள் தவிர மற்ற நிர்வாக அதிகாரம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே உண்டு என தீர்ப்பளித்தது.
ஆனாலும், இந்த தீர்ப்புக்கு இணங்காத ஒன்றிய அரசு, தீர்ப்பையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் என்பதை உருவாக்க அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை அடுத்த 6 மாதத்தில் நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். எனவே நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற விடாமல் முறியடிக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்ட ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். முதல் கட்டமாக, கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கெஜ்ரிவால் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் சிங் மானும் உடன் இருந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்கு பின் கெஜ்ரிவால், மம்தா செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மம்தா கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கிறோம். மாநிலங்களவையில் அனைத்து கட்சிகளும் டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடக்கும் அரைஇறுதி ஆட்டமாக இருக்கும். இப்போது, இரட்டை இயந்திரம் (மாநிலத்திலும் மத்தியிலும் பாஜ ஆட்சி) ஒரு பிரச்னைக்குரிய இன்ஜினாக மாறிவிட்டது’’ என்றார். கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘தேர்தலில் வெற்றி பெற முடியாத மாநிலங்களில் பாஜ கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது.
மக்களால் நியமிக்கப்பட்ட அரசுகளை உடைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு அரசுகளுக்கு இடையூறு செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு இது அக்னி பரீட்சைக்கான நேரம். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார். முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லி வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடமும் கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். அவசர சட்டத்தை முடக்க நிதிஷ்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக கெஜ்ரிவால், இன்று மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும், நாளை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் சந்திக்க உள்ளார்.
The post ஒன்றிய அரசுக்கு எதிராக ஆதரவு திரட்ட மம்தாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: பாஜ அல்லாத மாநில முதல்வர்களை சந்திக்கவும் திட்டம் appeared first on Dinakaran.