×

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவே வெளிநாட்டு பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறக் கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகத்தான் வெளிநாடு பயணம் செல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில், 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும், அரசு துறையினுடைய உயர் அதிகாரிகளும் வருகிறார்கள். ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளோடு ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகவே, இப்போது ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்த பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு முதலீட்டாளர்களை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்தும் பேச இருக்கிறேன். ஒரு சில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்த பயணத்தினுடைய முக்கிய நோக்கம் என்பது வருகிற 2024 ஜனவரி மாதம் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதுதான். ஆகவே, அந்த நோக்கத்தோடுதான் செல்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளோடு சொல்லுகிறேன், நீங்களும் என்னை வாழ்த்தி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து…முதல்வர் மு.க.ஸ்டாலின்: மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாட்டின் பயணத்தின்போது பெற்ற முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால், கடந்த முறை நான் மேற்கொண்ட துபாய் பயணத்தின்போது ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15,100 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

அதில் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில், தன் திட்டத்திற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணிகளை துவக்கிட தயாராக இருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால், ஜூலை 2021 முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. ரூ.2,95,339 கோடி அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும்போது, 4,12,565 பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும். அந்த அடிப்படையில்தான், இந்த பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். சிங்கப்பூர், ஜப்பானை தொடர்ந்து வேறு எந்தெந்த நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள்? அது பின்னர் தான் முடிவு செய்யப்படும்.

முதலீடுகள் எவ்வளவு ஈர்க்கப்படவுள்ளது? கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். அங்கு சென்ற பிறகுதான் முடிவு செய்யப்படும். இந்த பயணம் வெற்றிகரமாக முடியுமா? நிச்சயம் வெற்றிகரமாக முடியும். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை. வாழ்த்துகளை சொல்லி அனுப்புங்கள். நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவே வெளிநாட்டு பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : World Investor Conference ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,World Investors Conference ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...