×

ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரம் லிவிங் டூ கெதர் காதலி கழுத்து நெரித்து கொலை-காதலன் போலீசில் சரண்

திருமலை : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில் சிராவணி சில மாதங்கள் கோவாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்து அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், பரவாடாவை சேர்ந்த ஓவியரான கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், சிராவணியின் நடத்தை மீது கோபால கிருஷ்ணாவுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆண்களுடன் நெருங்கி பழகி வருவதாக சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

மேலும், சிராவணி வேறு சில ஆண்களுடன் போனில் பேசி வந்ததால், இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் பலமுறை கோபால கிருஷ்ணா கண்டித்துள்ளார். ஆனால், சிராவணி தனது ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், வெங்கி என்பவருடன் பழக்கத்தில் இருப்பதை அறிந்து, அவருடன் பழகக்கூடாது என்று கோபாலகிருஷ்ணா எச்சரித்திருக்கிறார்.

ஆனால் இதை கேட்காமல் சிராவணி செல்போனில் மெசேஜ் மூலமாக வெங்கியுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதை பார்த்த கோபால கிருஷ்ணா ஆத்திரம் அடைந்தார். இதனால் சிராவணியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, சிராவணியிடம் நைசாக பேசி விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள கோகுல் பார்க் பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் வெங்கியுடன் பழகுவது குறித்து கேட்டுள்ளார்.

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்து சிரவாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், கோபாலகிருஷ்ணா தானாகவே மகாராணி பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து கோபாலகிருஷ்ணாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஆத்திரம் லிவிங் டூ கெதர் காதலி கழுத்து நெரித்து கொலை-காதலன் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Siravani ,Jagathamba ,Visakhapatnam, Andhra Pradesh ,Saran ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி