×

கொள்ளிடம் பகுதியில் ஆட்டு கிடை அமைப்பதில் விவசாயிகள் தீவிரம்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் இயற்கை உரமான ஆட்டு கிடை அமைப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எடமணல், வடகால், கட வாசல், திருக்கருக்காவூர், பழைய பாளையம், மாதாணம், குன்னம், கிழமாத்தூர், ஓலையம்பத்தூர் ஆகிய பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த விளைநிலங்கள் அறுவடை முடிந்து தரிசாக உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் மழை பெய்தால் மட்டுமே சாகுபடியை செய்ய முடியும். தற்பொழுது கோடை காலமாக இருந்து வருவதால் தங்கள் விளை நிலங்களில் விவசாயிகள் ஆட்டு கிடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமான ஆடுகள் மேய்ச்சலுக்காக வந்துள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்தி தங்கள் வயல்களில் ஆட்டுக்கிடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சம்பா நெற்பயிர் அறுவடை முடிந்த பிறகு ராமநாதபுரம் பகுதியில் இருந்து மந்தை மந்தையாக வரும் ஆடுகளின் கூட்டங்கள் தரிசு நிலங்களில் மேய்ந்த பிறகு உரிய வயல்களில் உரத்துக்காக கிடை அமைத்து ஆடுகளை தங்க வைத்தனர்.

இதனால் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைத்தது. நல்ல உணவு உற்பத்தியும் இருந்து வந்தது. ஆட்டுக்கிடை அமைப்பதற்கு ஆடுகளின் உரிமையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வயல்வெளிகளில் வந்து சிறு குடில் அமைத்து தங்கி தினந்தோறும் ஒவ்வொரு விளைநிலத்திலும் ஆட்டுக்கிடை அமைத்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வருடம் தோறும் வரவேண்டிய ஆடுகளின் கூட்டம் குறைந்துள்ளது. முன்பு இருந்ததை விட 60 சதவீதத்துக்கு மேல் குறைந்துவிட்டது. இதனால் சில நிலங்களில் மட்டுமே ஆட்டுக்கிடை அமைக்க முடிகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது கொள்ளிடம் கடைமடை பகுதியான கிராமப் பகுதிகளில் நெற்பயிரைதவிர மாற்று பயிர் செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே வரும் ஆண்டு சம்பா சாகுபடிக்காக விளைநிலங்களில் ஆட்டுக்கிடை கட்டும் பணி நடந்து வருகிறது. தற்பொழுது ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளை செம்மறி ஆடுகள் அதிகமாக வருவதால் அவற்றைப் பயன்படுத்தி வயலில் ஆட்டுக்கிடை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆட்டுக்கிடை அமைப்பதன் மூலம் விளைநிலங்களின் ஆட்டு சாணம் மற்றும் கோமியம் விளைநிலங்களில் விழுவதால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு செழுமையாக காணப்படும், இதனால் ரசாயன உரங்களை பயன்படுத்த தேவையில்லை. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும் இதனால்சம்பா சாகுபடி சிறப்பான விளைச்சலை அளிக்கும் என்ற நோக்கில் ஆட்டுக்கிடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

The post கொள்ளிடம் பகுதியில் ஆட்டு கிடை அமைப்பதில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mayaladuthurai District ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்