×

கோயில் இருக்கும் இடத்தில் சமுதாயக்கூடம் கட்ட மக்கள் எதிர்ப்பு

திருமங்கலம், மே 23: கள்ளிக்குடி அருகே கோயில் அமைந்துள்ள இடத்தை கையகப்படுத்த கூடாது என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்கள் சிவன் கோயில் கட்டி கடந்த ஒரு வருடமாக பூஜை செய்து வருகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி ஆகிய முக்கிய வழிபாட்டு தினங்களில் பூஜைகள் நடத்தி வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கள்ளிக்குடி யூனியன் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு வந்து கிராமமக்களிடம் கோயில் அமைந்துள்ள இடத்தில் சமுதாய கூடம் அமைய இருப்பதாக தெரிவித்தனர்.இதற்கு அப்பகுதி மக்கள், ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். அனைவரும் ஒன்றிணைந்து இக்கோயிலை கட்டி எழுப்பி உள்ளோம். இதனை அகற்ற எங்களுக்கு விருப்பமில்லை. ஆதலால் வேறு இடத்தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும். மேலும் சமுதாயக்கூடம் அமைப்பதற்கு இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமாக நிறைய இடம் உள்ளது. ஆனால் எங்களுக்கு என்று இந்த ஒரு கோயில் மட்டுமே இருக்கிறது. கோயில் அமைந்துள்ள இடத்தை அதிகாரிகள் கையகப்படுத்த நினைப்பது தவறானது என்று தெரிவித்தனர்.

The post கோயில் இருக்கும் இடத்தில் சமுதாயக்கூடம் கட்ட மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Kallikkudi ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...