×

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு ராகுல், கார்கேவுடன் நிதிஷ் மீண்டும் சந்திப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனகார்கே ஆகியோரை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று மீண்டும் சந்தித்து பேசினார். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் ஒன்றிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்காக கடந்த மாதம் டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், மகாராஷ்டிரா மாநில அரசியல் தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதோடு உபி சென்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவையும் அவர் சந்தித்தார். மேலும் கர்நாடக முதல்வராக சித்தராமையா 20ம் தேதி பதவி ஏற்ற தினத்தில் அங்கும் சென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் டெல்லி சென்ற நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து நேற்று டெல்லி ராஜாஜிமார்க் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்திற்கு நிதிஷ்குமார் சென்றார். அங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் லாலன்சிங் ஆகியோர் இருந்தனர். அவர்களிடமும் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் வருவது குறித்து இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நிதிஷ்குமார் மேற்கொண்டு வரும் இந்த சந்திப்பு பா.ஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

The post எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு ராகுல், கார்கேவுடன் நிதிஷ் மீண்டும் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Nidish ,Opposition Unite ,Rahul ,New Delhi ,Bihar ,Chief Minister ,Nitishkumar ,Rakulkanti ,Malligarjunakarke ,Karke ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியை தொடர்ந்து...