×

பொன்னேரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்: நோயாளிகள் அவதி

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரி தமிழக சுகாதாரத் துறைக்கு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பொன்னேரி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஒரு தலைமை மருத்துவர், உதவி மருத்துவர்கள், 19 செவிலியர்கள், 25 துப்புரவு பணியாளர்கள், 7 பணியாளர்கள் என உள்ளனர். ஆனால், 6 உதவி மருத்துவர்கள், 2 செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 4 உள்ளிட்ட 13 பணி இடங்கள் காலியாக உள்ளது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, தாய் சேய் நலம், கர்ப்பகால சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனை மற்றும் புற நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை, டெங்கு காசநோய் பரிசோதனை இதனைத் தவிர, கொரோனா தடுப்பு அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றது.

இந்த தாலுகா அரசு மருத்துவமனையில் மீஞ்சூர், காட்டூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரணி, அத்திப்பட்டு, மணலி புதுநகர், சோழவரம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், பொன்னேரி தாலுக்கா அரசு மருத்துவமனைக்குத்தான் வர வேண்டும். மேலும், இந்த அரசு மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகள் ஓ.பி. சீட்டு வாங்குவதிலிருந்து, மருத்துவரை பார்ப்பது, மருந்துகள் வாங்குவது என அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதற்கு போதிய மருத்துவர்களும், பணியாளர்களும் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு காவலாளி கூட இல்லை. டயாலிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு பகுதியில் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் திரும்பிச் செல்கின்றனர். விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும் மருத்துவமனைகள் படுக்கைக்கு பக்கத்தில் உள்ள ஜன்னல் அருகே முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளன.

மேலும் நாய், ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால் நடைகள் மருத்துவமனைகள் உள்ளே சுற்றி திரிவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் ெபாதுமக்கள் பயந்து நடுங்குகின்றனர். இதில், மருத்துவமனையின் வராண்டாவில் தெரு நாய்களும் சுற்றி திரிவதுடன் அங்கேயே படுத்து உறங்கிவிடுகின்றது. எனவே, உடனடியாக தமிழக சுகாதாரத்துறை பொன்னேரி தாலுகா அரசு மருத்துவமனை சீரமைத்து கூடுதல் மருத்துவர்களையும் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பொன்னேரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்: நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Ponneri Government Hospital ,Avadi ,Bonneri ,Tamil Nadu Health Department ,Bonneri Government Hospital ,Dinakaran ,
× RELATED பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு