×

எடப்பாடி நடத்திய பேரணியால் அண்ணாசாலையில் 5 கி.மீ.க்கு கடும் போக்குவரத்து நெரிசல்: சாலையிலேயே வாகனங்களை நிறுத்திய அதிமுகவினர்

சென்னை: ஆளுநர் மாளிகை நோக்கி எடப்பாடி பழனிசாமி நடத்திய பேரணியால், அண்ணாசாலை மற்றம் அதனை சுற்றியுள்ள சாலைகளில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு மாநகர காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விதித்த நிபந்தனைகளை அதிமுகவினர் காற்றில் பறக்கவிட்டனர். பேரணிக்கு சின்னமலை மற்றும் வேளச்சேரி சாலையில் ேபாலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், அதிமுகவினர் பேரணிக்கு நேற்று காலை முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து தனியார் பேருந்துகள், வேன்கள், கார்களில் ஆயிரக்கணக்கில் வந்தனர். இவர்கள் அனைவரும் கிண்டி சுற்றியுள்ள வேளச்சேரி சாலை, ஆலந்தூர் சாலை, வடபழனி நூறடி சாலை, கிண்டி தொழிற்பேட்டை உட்புற சாலை, அண்ணாசாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை என அனைத்து சாலைகளிலும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, எடப்பாடி நடத்திய பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் திங்கள் கிழமையான நேற்று காலை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், கட்டுமான பணி, வியாபாரிகள், மருத்துவமனை செல்வோர் உள்ளிட்டோர் பல மணி நேரம் சாலையிலேயே காத்துகிடக்கும் நிலை எற்பட்டது.

குறிப்பாக, பூந்தமல்லி பகுதியில் இருந்து அண்ணாசாலை நோக்கி சென்ற வாகனங்கள், தாம்பரத்தில் இருந்து கிண்டி வழியாக வடபழனி நூறடி சாலை மற்றும் அண்ணாசாலை செல்லும் வாகனங்கள், வேளச்சேரி மற்றும் அடையாறு பகுதியில் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக அண்ணாசாலை, பூந்தமல்லி, கிண்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் எடப்பாடி நடத்திய பேரணியால் 5 கிலோ மீட்டருக்கு மேல் அணி வகுந்து நின்ற காட்சி காண முடிந்தது. பேரணி நடந்த சின்னமலை பகுதியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கிண்டி சுற்றியுள்ள அண்ணாசாலை, வடபழனி நூறடி சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ஆலந்தூர் சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாநகர பேருந்துகள் மற்றும் கார்களில் மருத்துவமனைகளுக்கு சென்ற நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் அவதிக்குள்ளாகினர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போலீசார் கடுமையாக அவதிப்பட்டனர். வாகனங்கள் செல்ல போலீசார் சாலையோரம் தடுப்புகள் அமைத்து இருந்தனர். ஆனால் அந்த தடுப்புகளை அதிமுகவினர் தூக்கி எரிந்துவிட்டு அப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் தென் சென்னை முழுவதும் நேற்று பிற்பகல் வரை இந்த போக்குவரத்து பாதிப்பு காணப்பட்டது. பேரணியால் ஏற்பட்ட நெரிசலால் பைக்குகளில் சென்ற பொதுமக்கள் பல மணி நேரம் உச்சி வெயிலில் சாலையில் நிற்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. பலர் இந்த போக்குவரத்து நெரிசலால் தங்களது அலுவலகங்களுக்கு மதியம் 12 மணிக்கு மேல் தான் செல்லும் நிலை ஏற்பட்டது. கூலி வேலைக்கு செல்வோர் தங்களது ஒருநாள் வேலை போய் விட்டது என்று மாற்று பேருந்துகள் மூலம் தங்களது வீட்டிற்கு திரும்பி செல்லும் நிலையும் காணமுடிந்தது.
அண்ணா சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தலைமை மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் நீண்ட நேரம் நடுரோட்டில் தவித்தனர்.

The post எடப்பாடி நடத்திய பேரணியால் அண்ணாசாலையில் 5 கி.மீ.க்கு கடும் போக்குவரத்து நெரிசல்: சாலையிலேயே வாகனங்களை நிறுத்திய அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Annasalam ,Chennai ,Palanisamy ,Governor's House ,Annasal ,Annasalalam ,Dinakaran ,
× RELATED 2019ல் ஆளும்கட்சியாக இருந்தும் ஒரு சீட்...