×

அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 2 மாஜி அமைச்சர்கள் ரூ.81 கோடி சொத்து குவிப்பு: நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்பு துறை 10,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.45.20 கோடியும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.35.79 கோடியும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சிறப்பு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கே.பி.அன்பழகன் மீது மட்டும் 10 ஆயிரம் பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக அதிமுக ஆட்சிக்காலமான 1.4.2016 முதல் 31.3.2021ம் ஆண்டு வரை கே.பி.அன்பழகன் பதவி வகித்தார். தற்போது அவர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலத்தில், தனது பதவியை தவறாக பயன்படுத்தி அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா மற்றும் அவரது மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் பெயரில் மொத்தம் 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக, தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. பின்னர். கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவில் கே.பி அன்பழகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 58 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் ரொக்கம், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கே.பி.அன்பழகன் அவரது உறவினர்களான பி.ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளான மாணிக்கம், மல்லிகா, எஸ்.எஸ். தனபால் ஆகியோர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் நிலங்கள், தொழில் முதலீடுகள், வங்கி இருப்புகள், நிலம், இயந்திரம் தளவாடங்கள், ஆபரணங்கள், வாகனங்கள் என சொத்துக்களாகவும், முறைகேடாக பெற்ற பணத்தை அவருக்கு சொந்தமான சரஸ்வதி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதன் வாயிலாகவும் என மொத்தம் 45 கோடியே 20 லட்சத்து, 53 ஆயிரத்து 363 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். மேற்படி வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் இசைவாணை பெறப்பட்டது. அதைதொடர்ந்து தருமபுரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தலைமை குற்றவியல் நடுவர் குற்றம் சாட்டப்பட்ட 10 நபர்கள் மற்றும் சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 ன்படி உரிய பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

முன்னதாக தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்குகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் இருந்து ஜீப்பில் குற்றப்பத்திரிகை நகல்களை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஏற்றி வந்தனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை சட்டமன்ற அதிமுக உறுப்பினரான சி.விஜயபாஸ்கர், கடந்த 1.4.2016 ம் ஆண்டு முதல் 31.3.2021ம் ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முன்னாள் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது பணிக்காலத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது பெயரிலும், தனது மனைவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் மொத்தம் 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 56 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் சி.விஜயபாஸ்கர் அரவது மனைவி ரம்யாவின் உடந்தையுடன் அவரது பெயரிலும், குடும்பத்தினரின் பெயரிலும் ராசி புளூ மெட்டல்ஸ், ராசி என்டர்பிரைசஸ் ஆகிய பெயர்களில் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், இயந்திர தளவாடங்கள், வாகனங்கள் மற்றும் ஆபரணங்கள் என மொத்தம் 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். மேற்படி வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் இசைவாணை பெற்று, புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்ற மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்படி உரிய பிரிவுகளின் கீழ் 154 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இயமவரம்பன் தலைமையிலான போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

இதனால் நேற்று காலை புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்புடன் காணப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ேக.பி.அன்பழகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இரு வேறு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பதவி வகித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகளில் முதல் முறையாக தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இருவர் மீதான வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 2 மாஜி அமைச்சர்கள் ரூ.81 கோடி சொத்து குவிப்பு: நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்பு துறை 10,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : 2 Maji ,Chennai ,Former Higher Education ,Minister ,K.K. GP ,Anbazhagan ,Minister of People's Wellbeing ,C.C. Vijayapascar ,2 ,Maji Ministers ,Power ,Department of Algeria ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...