பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் கடும் வேதனையுடன் தெரிவித்தனர். பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் நீரேற்று நிலையம் மூலம், நகர் மற்றும் வழியோர கிராமப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைக்காக பிரதான குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
நகரம், கிராம பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றியபின்னர் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு உட்பட்ட பிரதான குழாயில் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அதிகளவு விரயமாகிறது.
குறிப்பாக, கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்படும் உடைப்பால், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் அதிகளவு விரயமாவது பொதுமக்களிடம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அம்பராம்பாளையத்தில் இருந்து குளத்தூர் பிரிவை கடந்து செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் பகுதி, சுமார் பல மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த குழாய் உடைப்பை சரிசெய்யாமலும், கண்டுகொள்ளாமலும் அதிகாரிகள் மெத்தன போக்கில் உள்ளனர். இதனால், அந்த குழாயில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது தொடர்கிறது.
இந்நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால், குழாயை முறையாக சரிசெய்யாமல் விட்டுள்ளதால், குழாயில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அருகே செல்லும் சாக்கடையில் கலந்து தனியார் தோட்டத்து வழியாக சென்று வீணாகிறது. கோடை வறட்சி காலகட்டத்தில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் தருணத்தில், குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, உடைப்பு ஏற்பட்ட குழாயை விரைந்து சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொள்ளாச்சி அருகே குழாய் உடைப்பால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தினமும் வீண்-பொதுமக்கள் கடும் வேதனை appeared first on Dinakaran.
