×

கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆம்னி பஸ்களுக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் எப்போது?

*எதிர்பார்ப்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்

கம்பம் : கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் மக்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் மக்களின் அடிப்படை வசதிக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய போக்குவரத்து திட்டங்கள், புதிய வழித்தடங்கள் அரசு பஸ் இயக்கம், குடிநீர் திட்ட பணிகள், அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.தேனி மாவட்டத்தில் கம்பம் நகர் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 80 ஆயிரம் பொதுமக்களும், 25,000 குடியிருப்புகளும் உள்ளன.

மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. கம்பம் நகரில் நகராட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கம்பம் கூடலூர் ரோட்டிலும், கம்பம் கம்பமெட்டு ரோட்டிலும் நாளுக்கு நாள் கட்டுமான பணிகள் நடந்து தினந்தோறும் புதிய வீடுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகி கொண்டே செல்வதால், புதிய குடியிருப்புகள் பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கம்பத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக புறவழிச் சாலையிலும் அதிக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ஆம்னி பஸ்களின் ஆக்கிரமிப்பு

ஆனாலும், கம்பத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பெருகி வருகிறது. குறிப்பாக கம்பம் யுவராஜா தியேட்டர் முதல் காந்தி சிலை வரை இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஆம்னி பஸ்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் வெகு சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.கம்பம் நகரில் முக்கிய பகுதியான அரசமரம், காந்தி சிலை, போன்ற பகுதிகளில் மிகக் கடுமையான அளவு தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோடு வழியாக தேக்கடி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் இந்த ரோட்டின் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இதற்கிடையில் தேனி மாவட்டத்திலிருந்து தொலைதூர நகரங்களான சென்னை, பெங்களூர், மற்றும் புதுச்சேரி போன்ற பெரு நகரங்களுக்கு ரயில் வசதி இல்லாததால் தேனி மாவட்டத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சென்னை மற்றும் பெங்களூருக்கு தினமும் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு பொதுமக்களை ஏற்றி இறக்கிச் செல்ல ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாததால், போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர்.

ஆம்புலன்ஸ் ெசல்ல வழியில்லை

குறிப்பாக கம்பம் காந்தி சிலையை கடந்து அரசு பொது மருத்துவமனை உள்ளதால் இந்த வழியாகச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி போக்குவரத்தில் நின்று செல்ல வழி இல்லாமல் சிக்கி தவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை, சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் முகவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் இன்று வரை ஆம்னி பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது தொடர்கிறது.

கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கம்பம் நகராட்சி சார்பில் ஆம்னி பேருந்துகளுக்கு என தனி பேருந்து நிலையம் அமைக்க ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க ஆம்னி பஸ் முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆம்னி பஸ்களுக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் எப்போது? appeared first on Dinakaran.

Tags : Omney ,Tamil Nadu ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...