விழுப்புரம் : விழுப்புரம் காவல் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற டிஐஜி ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் காவல் சரக டிஐஜி பணியிடம் ஒரு மாதமாக காலியாக இருந்தது. இந்த பணியிடத்தில் சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல்ஹக் விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமான செயல்கள், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை. பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் பெயர் ஏதும் வெளியிடப்படாது. எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயல்களை தடுக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக கள்ளச்சாராயம், ஊறல், லாட்டரி, சூதாட்டம் போன்ற குற்ற சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்படும். காவல் நிலையங்கள், டிஎஸ்பி, எஸ்பி அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். சிவில் வழக்குகளை தவிர குற்ற வழக்குகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடியிசம் ஒழிக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். புதுச்சேரியிலிருந்து மது, சாராயம் கடத்தலை தடுக்க ஏற்கனவே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். கள்ளச்சாராயம் குறித்து கிராமப்புறங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குட்கா விற்பனையை முற்றிலும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். எஸ்பிக்கள் கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன்ராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post விழுப்புரம் காவல் சரகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும்-புதிய டிஐஜி பேட்டி appeared first on Dinakaran.

