×

மசினகுடி – தெப்பக்காடு இடையே வனத்திற்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி – தெப்பக்காடு இடையேயான வனப்பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்வதால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ, பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 321 சதுர கிமீ, பரப்பளவு உள்மண்டல பகுதியாகும்.

இப்பகுதியில் தான் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள், பறவையினங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. மேலும் உள் மண்டலம் வழியாகத்தான் மசினகுடி – தெப்பக்காடு இடையேயான சாலை மற்றும் தொரப்பள்ளி முதல் கக்கனல்லா வரையிலான சாலையும் செல்கிறது. இதனால் இச்சாலை வழியாக பயணிக்கும்போது யானை, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகளை அடிக்கடி காண முடியும்.

சில சமயங்களில் அரிதாக புலியை பார்க்க முடியும். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இச்சாலைகளில் பயணிக்கும்போது சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இறங்கக்கூடாது. காப்பு காடுகளுக்குள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்வதுடன், ஆங்காங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரள, கர்நாடக சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சமீபகாலமாக தொரப்பள்ளி முதல் கக்கனல்லா சோதனைச்சாவடி, மசினகுடி – தெப்பக்காடு மற்றும் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலையில் உலா வருவது, வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் நடப்பதை காண முடிகிறது. ஆனால் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதனை கண்டு கொள்ளாமல் உள்ளது.

வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதால் வனவிலங்குகள் தாக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது. பாதுகாப்பட்ட வனப்பகுதி வழியாக செல்லக்கூடிய சாலையில் பல இடங்களில் குப்பைகள் கிடப்பதை காண முடிகிறது. தற்போது வனங்கள் பசுமையாக காட்சியளிக்கும் நிலையில் யானைகள் கூட்டமாக சாலையை கடக்கும் காட்சிகளை காண முடிகிறது. இதுபோன்ற சமயங்களில் வனங்களில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை யானை அல்லது புலி தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வனத்திற்குள் நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post மசினகுடி – தெப்பக்காடு இடையே வனத்திற்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Mazinagudi ,Deepakadam ,Mutumalai Tigers Archive ,Masinagudi ,Deepakadu ,Mashinakudi ,Depakkadam ,
× RELATED பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை...