×

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் 200 கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்..!!

ஈரோடு: கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் கீழ்பவானி கால்வாய் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பெறுகின்றனர். இந்த கால்வாயை சீரமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சீரமைப்பு திட்டத்தில் கான்கிரீட் பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகளின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த கான்கிரீட் திட்டத்தை செயல்படுத்தினால் மரங்கள் வெட்டப்படும், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும், விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. மற்றொரு தரப்பு விவசாயிகள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சீரமைப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 200 கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கால்வாயில் கான்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கும். எனவே திட்டத்தில் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளக்கூடாது, மண் கால்வாய் மண்கால்வாயாகவே பராமரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கும் தயாராகி வருகின்றனர்.

The post கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் 200 கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Arachalur, Erode district ,Erode ,Dinakaran ,
× RELATED சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்