×

வத்தல்மலையில் மகப்பேறுக்காக அரசு மருத்துவமனையை நாடும் மலை கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம்

 

தர்மபுரி, மே 22: தர்மபுரி அருகே வத்தல்மலையில் மகப்பேறு மருத்துவத்திற்கு முழுமையாக அரசு மருத்துவமனையை மலைக் கிராம மக்கள் நாடுகின்றனர். வத்தல்மலையில் ஒன்றியங்காடு, பால்சிலம்பு, நாயக்கனூர், பெரியூர் உள்ளிட்ட 10 மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். வத்தல்மலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. மலைப்பகுதி மக்களிடம் அரசு மருத்துவமனைக்கு செல்வது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உடல்ரீதியான உபாதைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றுவிடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வீடுகளிலேயே இம்மக்கள் பிரசவம் பார்த்து கொள்வார்கள். உடல்ரீதியான பிரச்னைக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் நாட்டு வைத்தியம் செய்து கொள்ளுவார்கள். ஆபத்தாக கட்டத்தில் மட்டுமே தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு முழுமையாக ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கிறது என்ற எண்ணம் அவர்களிடம் உருவாகியுள்ளது.

இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. தற்போது வத்தல்மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மகப்பேறு சிகிச்சைக்காக முழுமையாக நம்பி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதால் எந்த நேரத்திலும் சிகிச்சைக்கு மக்கள் செல்கின்றனர். சுகப்பிரசவம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்டவை வத்தல்மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முழுமையாக கிடைத்து வருகிறது. அதனையும் தாண்டி சில அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றிக்கு மட்டும் வத்தல்மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வத்தல் மலையில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக அளவில் தேனீ மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சைக்காக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிக அளவில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்‌. மேலும் கொரோனா பேரிடர் காலங்களில் கொரோனா தடுப்பூசி அனைத்து பொதுமக்களும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை மருத்துவ பணியாளர்கள் தொடர் விழிப்புணர்வு காரணமாக கொரோனோ தடுப்பூசி இப்பகுதியில் 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக முதல்வர் வத்தல்மலை வந்து சென்ற பின்னர் எங்களுக்கு போதிய வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. முக்கியமாக தர்மபுரியில் இருந்து வத்தல்மலைக்கு பஸ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் மக்கள் நகரத்திற்கு சென்று விட்டு வருவதற்கு எளிதாக உள்ளது. நாங்கள் உடல் பிரச்னைக்கு அரசு மருத்துவமனைக்கு மட்டுமே செல்கிறோம் என்றனர்.

The post வத்தல்மலையில் மகப்பேறுக்காக அரசு மருத்துவமனையை நாடும் மலை கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Vatalmalay ,Darmapuri ,Vattalmula ,hospital for ,Wattalmalai ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...